சுடச்சுட

    

    காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும்: அமரீந்தர் சிங்

    By DIN  |   Published on : 15th March 2017 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amrindeersingh

    காங்கிரஸ் கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய அக்கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் அமரீந்தர் சிங்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என்று அக்கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவர் அமரீந்தர் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
    மொத்தம் 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
    இதையடுத்து, பஞ்சாப் முதல்வராக அந்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அமரீந்தர் சிங் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார். இதையொட்டி, பஞ்சாபில் ஆட்சியமைப்பது தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
    அப்போது, தேர்தலில் சிறப்பாக பணியாற்றியதற்காக அமரீந்தர் சிங்கை ராகுல் காந்தி வெகுவாகப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது, பஞ்சாப் அமைச்சரவையில் இடம்பெறுவோரின் விவரங்கள், முக்கியப் பதவிகளுக்கு யார் - யாரை நியமிப்பது என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.
    இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமரீந்தர் சிங் கூறியதாவது:
    இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. பஞ்சாபில் ஆட்சியமைப்பது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலருடன் ஆலோசனை நடத்திய பின்னர் மீண்டும் ராகுல் காந்தியை சந்திக்கவுள்ளேன். அதன் பிறகுதான், மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
    ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவராக வர வேண்டும் என விரும்புகிறேன். கடந்த ஓராண்டாகவே இதனை நான் கூறி வருகிறேன். அவரை அந்த இடத்தில் வைத்து பார்க்க நாங்கள் அனைவரும் ஆசைப்படுகிறோம்.
    பஞ்சாபில் காங்கிரஸின் வெற்றிக்காக உழைத்த எங்கள் கட்சியின் அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. ஆனால், அந்த மாநிலங்களில் குறுக்கு வழியில் பாஜக ஆட்சியமைக்க முயலுகிறது. இது, ஜனநாயக விரோதச் செயலாகும் என்றார் அமரீந்தர் சிங்.
    எளிமையான முறையில் பதவியேற்பு விழா: இதனிடையே, பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் பதவியேற்கும் விழாவை எந்தவித ஆடம்பரமும் இன்றி மிக எளிமையான முறையில் நடத்த இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai