சுடச்சுட

    

    ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவு எம்.பி.க்கள் மக்களவையில் 2-ஆவது நாளாக முறையீடு

    By DIN  |   Published on : 15th March 2017 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    admk

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை முறையிட்ட ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு அதிமுக எம்.பி.க்கள்.

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மக்களவையில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் நாமக்கல் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் தலைமையில் முறையிட்டனர்.
    இது தொடர்பாக மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை ஓபிஎஸ் ஆதரவு எம்பிக்கள் பிரச்னை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கேள்வி நேரம் முடிந்ததும் தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் நாமக்கல் தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் தலைமையில் இருக்கை பகுதியில் நின்றபடி குரல் கொடுத்தனர்.
    இதையடுத்து, சுமித்ரா மகாஜன் அனுமதியுடன் பி.ஆர். சுந்தரம் தமிழில் பேசியதாவது: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாங்கள் வலுவாக நம்புகிறோம். தமிழக மக்களுக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றியும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் தெளிவான அறிக்கையை மாநில அரசோ, அவர் அனுமதிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவனையோ அளிக்கவில்லை. மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த 75 நாள்களில் ஒரு நாள் கூட அவரைப் பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை.
    ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது ஜெயலலிதா மயங்கிய நிலையில் இருந்தார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் நீர்ச்சத்து, காய்ச்சல் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக அதே மருத்துவமனை பின்னர் கூறியது. இந்த மாறுபட்ட அறிக்கைகளால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மக்களுக்கு சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. இது பற்றி மாநில அரசு நடத்தும் விசாரணையில் நியாயம் கிடைக்காது. எனவே, சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்' என்றார்.
    முன்னதாக, பி.ஆர்.சுந்தரம் பேசும் போது சசிகலா அணியைச் சேர்ந்த வெங்கடேசபாபு, அன்வர் ராஜா உள்ளிட்டோர் ஆட்சேபம் தெரிவித்தனர்.

    மாநில அரசு அறிக்கைக்கு பிறகு முடிவு: மத்திய அரசு விளக்கம்

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாநில அரசு உத்தரவின்படி நடைபெற்று வரும் விசாரணை அறிக்கை வந்த பிறகு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்தார்.
    இது தொடர்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை அதிமுக எம்.பி. பி.ஆர்.சுந்தரம் பேசியதும் அனந்த் குமார் கூறியதாவது: மக்களால் போற்றப்படும் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருக்கலாம் என பொதுவாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உரிய விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கையின் முடிவு மத்திய அரசுக்கு வரும். அதன் பிறகே மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த விஷயத்தில் முறையிடும் எம்.பி.க்களின் ஆழ்ந்த கவலையை அவர்களுடன் மத்திய அரசும் பகிர்ந்து கொள்கிறது. நாங்கள் அவர்களுடன்தான் இருக்கிறோம்' என்றார்.
    இந்தப் பதிலால் திருப்தி அடையாத பி.ஆர்.சுந்தரம் உள்ளிட்ட எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளியேறினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai