சுடச்சுட

    

    தலைமைத் தேர்தல் ஆணையருடன் ஓ.பி.எஸ். குழுவினர் இன்று சந்திப்பு

    By DIN  |   Published on : 15th March 2017 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ops2

    அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரம், கட்சி சின்னம் ஆகியவை தொடர்பாக தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை (மார்ச் 15) சந்தித்துப் பேசவுள்ளார்.
    அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா நியமிக்கப்பட்ட நடைமுறை, கட்சி விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் மேற்கொண்ட அனைத்து நியமனங்கள், பன்னீர்செல்வம், மதுசூதனன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று பன்னீர்செல்வம் ஆதரவு அணியைச் சேர்ந்த மைத்ரேயன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தனர்.
    யாருக்கு அதிமுக சொந்தம்?: இந்தப் புகாருக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்துக்கு சசிகலா கடந்த வாரம் பதில் அனுப்பினார். இந்நிலையில், ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தும் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்தத் தேர்தலில் சசிகலா தலைமையிலான அணியும், பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும், "நாங்கள்தான் உண்மையான அதிமுக. எனவே, கட்சியின் இரட்டை இலைச் சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும்' என வலியுறுத்தி பரஸ்பரம் தேர்தல் ஆணையத்திடம் முறையிடத் தீர்மானித்துள்ளன.
    இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்திக்க அவரது அலுவலகம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளது. இதையொட்டி, புதன்கிழமை காலை 6.45 மணிக்கு சென்னையில் இருந்து தில்லிக்கு விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி புறப்படுகிறது. இக்குழுவில் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கே.பாண்டியராஜன், செம்மலை, எம்.பி.க்கள் மைத்ரேயன், அசோக் குமார் உள்ளிட்டோர் இடம் பெறுகின்றனர்.
    கோரிக்கை என்ன?: தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்கும் போது, "எதிர்வரும் ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்பதால் விரைவில் அதிமுக தலைமை யாருக்கு உரியது என்பதை தேர்தல் ஆணையம் விசாரித்து உத்தரவிட வேண்டும் என பன்னீர்செல்வம் கேட்டுக் கொள்வார் எனத் தெரிகிறது.
    இதற்கிடையே, கட்சித் தலைமை நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்துக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பினார். அதற்குரிய விளக்கத்தை புகார்தாரர் என்ற முறையில் டாக்டர் மைத்ரேயன் எழுத்துப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
    61 பக்க கடிதம்: மொத்தம் 61 பக்கங்கள் அடங்கிய விளக்கத்தை மைத்ரேயன் அளித்தார். அதில், "கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை கடந்த 2012-இல் ஜெயலலிதா நீக்கினார். அதன் பிறகு சில மாதங்களில் தன்னை கட்சியில் மீண்டும் ஜெயலலிதா சேர்த்து கொண்டதால் தன் மீதான நடவடிக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டதாகக் கருத வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளது தேர்தல் ஆணையத்தைத் தவறாக வழிநடத்தும் நடவடிக்கை. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவை மீண்டும் சேர்த்துக் கொள்ளும் போது அவர் புதிய உறுப்பினராகவே கருதப்படுகிறார். அந்த வகையில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இல்லாத சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது கட்சி விதிகளின்படி தவறு' என்று மைத்ரேயன் குறிப்பிட்டுள்ளார்.
    இது குறித்து செய்தியாளர்களிடம் மைத்ரேயன் மேலும் கூறுகையில், "எனது பதில் கடிதத்தின் முழுமையான விவரத்தை தற்போது தெரிவிக்க இயலாது. ஆனால், சசிகலாவின் நியமனம் செல்லாது என்பதை நிரூபிக்கும் கட்சி விதிகள், நடைமுறை நடவடிக்கை போன்றவற்றை தேர்தல் ஆணையத்திடம் அளித்த கடிதத்தில் விவரித்துள்ளேன். உண்மையான அதிமுக ஓ.பி.எஸ். தலைமையிலான அணி என்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். அதன் பிறகு சசிகலா அணியில் உள்ள அனைவரும் எங்களுடன் சேருவார்கள்' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai