சுடச்சுட

    
    rahulgandhi

    உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்கள் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு மோசமாக அமையவில்லை என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து, ராகுல் தீவிர பிரசாரம் மேற்கொண்ட போதும் காங்கிரஸ் கட்சியால் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பஞ்சாப் தவிர பிற மாநிலங்களில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த சில நாள்களாக அமைதி காத்து வந்த ராகுல் காந்தி, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
    காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரையில் கட்சியை அமைப்பு ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது என்பது உண்மை. காங்கிரஸ் கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மணிப்பூரிலும், கோவாவிலும் கூட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இது மோசமான தேர்தல் முடிவு இல்லை.
    உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகண்ட் மாநிலத்தில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்ற, இறக்கம் சகஜமானது. உத்தரப் பிரதேசத்தில் எங்கள் கட்சி சிறிய பின்னடவைச் சந்தித்துள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். வெற்றி பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், கொள்கைரீதியாக பாஜகவுடன் போரிட்டு வருகிறோம்; அந்தப் போராட்டம் தொடரும்.
    மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதன் மூலம்தான் பாஜக தேர்தலில் வென்றுள்ளது. உத்தரப் பிரதேச தேர்தல் தோல்வியால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம். கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றும், சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டுமென்றும் கட்சித் தலைவர்கள் என்னிடம் வலியுறுத்தியுள்ளனர். பஞ்சாப், மணிப்பூர், கோவாவில் காங்கிரஸின் வெற்றிக்கு உழைத்த மாநிலத் தலைவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ராகுல் காந்தி.
    காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:
    உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவு என்பது ராகுல் காந்தி மீதான பொது வாக்கெடுப்பு அல்ல. தோல்விக்கு அவர் பொறுப்பேற்க வேண்டுமென்று கூறுபவர்கள், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு ராகுல்தான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? என்று கேள்வி எழுப்பினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai