சுடச்சுட

  

  பண பலத்தின் மூலம் ஆட்சியை அபகரிக்கிறது பாஜக: ராகுல் குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 15th March 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Rahul

  கோவா மற்றும் மணிப்பூர் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத போதிலும், பண பலத்தின் மூலம் அந்த மாநிலங்களில் ஆட்சியை அபகரிக்கும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
  இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகத்தின் மாண்பை பாஜக குலைப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
  நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த ராகுல் காந்தி, 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து கூறியதாவது:
  உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றிருப்பதை எவரும் மறுக்க முடியாது. அதற்காக அக்கட்சியைப் பாராட்டியாக வேண்டும்.
  அதேநேரத்தில், உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது மக்களிடையே நீடிக்கும் பிரிவினைதான். அதனைச் சரியாகப் பயன்படுத்தி பாஜக வெற்றி பெற்றுவிட்டது.
  பஞ்சாபில் தனிப் பெரும்பான்மையுடன் வாகை சூடிய காங்கிரஸ், மணிப்பூர் மற்றும் கோவாவில் அதிக இடங்களைக் கைப்பற்றியது. அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், அந்த மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததாகக் கருத முடியாது.
  அந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஏன் உரிமை கோரவில்லை? என்று கேட்கப்படுகிறது. காங்கிரûஸ விடக் குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, கோவாவிலும், மணிப்பூரிலும் ஆட்சியமைக்க உரிமை கோரியதைச் சுட்டிக்காட்டி இந்தக் கேள்வி எழுப்பப்படுகிறது.
  எவ்வளவு விரைவாக பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது? என்பதைக் காட்டிலும், அதற்காக எவ்வளவு பணத்தைச் செலவிட்டது? என்று கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். பண பலத்தால் மக்களின் தீர்ப்பை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஆட்சியை அபகரிக்க பாஜக முயலுகிறது. பொதுவாக காங்கிரஸýக்கும், பாஜகவுக்கும் இடையே கொள்கைரீதியான மோதல்கள் இருக்கும். தற்போது, மணிப்பூரிலும், கோவாவிலும் பாஜக தனது கொள்கைகளின்படியே மக்கள் தீர்ப்புக்கு எதிராக ஆட்சியமைக்க முயன்று வருகிறது. அதற்கு எதிராக காங்கிரஸ் போராடி வருகிறது. கோவா ஆளுநரின் நடவடிக்கைகள் அனைத்தும் பாஜக சார்பு நிலையிலேயே உள்ளன என்றார் ராகுல் காந்தி.

  ஜேட்லி பதிலடி

  ஆட்சியை பாஜக அபகரிக்க முயலுவதாக காங்கிரஸ் கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என்று மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக முகநூல் பதிவில் அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கருத்து:
  கோவாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகிய காங்கிரஸ், தோல்வியைச் சந்தித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பவும் அக்கட்சி முயன்றது.
  அறுதிப் பெரும்பான்மை எவருக்கும் கிடைக்காத நிலையில், அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு பெற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைத்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் பல முறை நடந்துள்ளன. அதைப் புரிந்து கொள்ளாமல், ஆட்சியை அபகரிப்பதாக பாஜக மீது அபாண்ட பழி சுமத்துவது தவறு என்று அந்தப் பதிவில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai