Enable Javscript for better performance
பாலியல் புகார்: காயத்ரி பிரஜாபதியின் உதவியாளர்கள் 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் புகார்: காயத்ரி பிரஜாபதியின் உதவியாளர்கள் 3 பேர் கைது

    By DIN  |   Published on : 15th March 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுக்கு ஆளானவரும், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் அரசில் அமைச்சராக பதவி வகித்தவருமான காயத்ரி பிரஜாபதியின் உதவியாளர்கள் மேலும் 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    பிரஜாபதியும், அவரது உதவியாளர்களும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது மகளுக்கும் அவர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
    அந்த மனுவில், "உத்தரப் பிரதேச அரசில் பிரஜாபதி அமைச்சராக இருப்பதால், அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய காவல் துறை முன்வரவில்லை. எனவே, பிரஜாபதி, அவரது உதவியாளர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரஜாபதி உள்ளிட்டோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறும், அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரப் பிரதேச காவல் துறைக்கு உத்தரவிட்டது.
    இதனைத் தொடர்ந்து, பிரஜாபதி, அவரது உதவியாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    இந்நிலையில், பிரஜாபதி தலைமறைவாகிவிட்டார். வெளிநாடு தப்பிச் செல்லாமல் தடுப்பதற்காக அவரது கடவுச்சீட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
    இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், லக்னௌவில் போலீஸார் செவ்வாய்க்கிழமை நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    இதனிடையே, தலைமறைவாகியுள்ள காயத்ரி பிரஜாபதி எங்கு இருக்கிறார் என்பதை அறிவதற்காக அவரது 2 மகன்கள் மற்றும் சகோதரரின் மகன் ஆகியோரிடம் போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai