
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு உத்வேகம் அளிக்கும் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கொச்சியில் ஃபெடரல் வங்கியின் நிறுவனர் நாள் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அரவிந்த் சுப்பிரமணியம் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் மிகவும் வியப்பை அளிப்பதாகவே அமைந்தன. ஏனெனில், மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
எனினும், இத்தேர்தல் முடிவால் மத்திய அரசுக்கு, அரசியல் ரீதியில் மக்கள் ஓர் அங்கீகாரத்தை அளித்துள்ளனர். இதன் மூலம் மத்திய அரசு தாங்கள் விரும்பும் வகையில் செயல்பட முடியும். பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை எந்த அளவுக்கு சிறப்பாக மேற்கொள்கிறார்கள் என்பதும் இதில் அடங்கும். பல்வேறு மைல்கல்களைக் கடந்தால்தான் அது வெற்றிகரமான அரசு என்று பெயரெடுக்கும்.
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கை முதல்கட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்ததுதான். இதனை மறுசீராய்வு செய்யும்போது எந்தவிதமான மாற்றமும் ஏற்படலாம். நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சிறப்பானவை. உற்பத்தித் துறையை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தின் அளவு கட்டுப்பாட்டுகள் வந்துள்ளது மட்டுமல்லாது, வரி வசூலும் அதிகரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வளவு பணம் புழக்கத்தில் உள்ளது என்பதை இனி எளிதாகக் கணக்கிட முடியும். எதிர்காலத்தில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தால் ரூபாய் நோட்டு
வாபஸ் நடவடிக்கைக்கு மற்றொரு வெற்றியாகும்.
வாபஸ் பெறப்பட்ட பணத்தின் மதிப்பில் 70 சதவீதத்துக்கும் குறைவான தொகையை மட்டுமே ரிசர்வ் வங்கி மீண்டும் புழக்கத்துக்கு அனுப்பியுள்ளது. சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கப்படுவதும், வரி ஏய்ப்பு நடவடிக்கைகளும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளன.
ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைகள் எந்த அளவுக்கு அதிகரிக்கிறது என்பதை வைத்தும் இந்த நடவடிக்கையின் வெற்றியை அளவிட முடியும். எனினும், ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட மக்களைக் கட்டாயப்படுத்த முடியாது. ஏனெனில், நமது நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் "ஸ்மார்ட் போன்' உள்ளிட்ட நவீன கருவிகளைப் பயன்படுத்துவதில்லை என்றார் அவர்.