சுடச்சுட

  
  Biren

  மணிப்பூர் மாநில சட்டப் பேரவை பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நாங்தோம்பம் பிரேன் சிங்கை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லா செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தார்.
  இதையடுத்து, அந்த மாநில முதல்வராக புதன்கிழமை அவர் பதவியேற்கிறார்.
  இதுகுறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், "புதன்கிழமை நண்பகல் 2 மணியளவில் பிரேன் சிங் முதல்வராக பதவியேற்பார்' என்றன.
  முதல்வருடன் எத்தனை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள் என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை.
  ஹீன்காங்க் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பான்கீஜம் சரத்சந்திர சிங்கைத் தோற்கடித்து எம்எல்ஏ ஆகியுள்ள பிரேன் சிங் (56), கால்பந்து வீரராகவும், பத்திரிகையாளராகவும் இருந்து, அரசியலுக்கு வந்தவர்.
  மணிப்பூரில் மொத்தம் 60 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. அண்மையில், இந்த மாநிலத்துக்கு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 28 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 21 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றது. தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் தலா 4 இடங்களையும், மத்திய அமைச்சர் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஓர் இடத்திலும் வெற்றி பெற்றது.
  சுயேச்சை வேட்பாளர் ஓரிடத்தில் வென்றார்.
  அரசமைக்க எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மணிப்பூரில் தொங்கு சட்டப் பேரவை அமைந்தது. இந்நிலையில், தேசிய மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பாஜக அரசமைப்பதற்கு ஆதரவளிப்பதாக அறிவித்தன.
  காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ஒருவரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
  இதனால், காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 27-ஆக குறைந்தது.
  அதையடுத்து, பாஜக மற்றும் ஆதரவளிக்க முன்வந்த கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களுடன் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவை பாஜக பிரதிநிதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இந்நிலையில், நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 4 பேர், ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
  இவர்களின் ஆதரவைத் தொடர்ந்து, பாஜக அணி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது.
  இதையடுத்து, பிரேன் சிங் தலைமையில் ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவுக்கு நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்தார்.
  "பாஜக அணியில் போதுமான எம்எல்ஏக்கள் இருந்ததால், அந்த அணியை ஆட்சி அமைக்க வருமாறு அழைத்தேன்' என்று பாஜகவுக்கு அழைப்பு விடுத்தது குறித்து நஜ்மா விளக்கம் அளித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai