Enable Javscript for better performance
மீண்டும் கோவா முதல்வரானார் பாரிக்கர்- Dinamani

சுடச்சுட

  
  Manohar-Parikar

  கோவா மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கும், 9 அமைச்சர்களுக்கும் மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
  முன்னதாக, பாரிக்கர் முதல்வராகப் பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், கோவா மாநில சட்டப் பேரவையில் பாஜக அரசு மீது வியாழக்கிழமை (மார்ச் 16) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
  பெரும்பான்மை பலம் இல்லாத கட்சிகள்: அண்மையில் நடைபெற்று முடிந்த கோவா பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், அதற்கு அடுத்தபடியாக பாஜக 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.
  பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையில், சுயேச்சைகள் மற்றும் மாநிலக் கட்சிகளான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா ஃபார்வர்டு கட்சி ஆகியவற்றின் ஆதரவோடு ஆட்சியமைக்க பாஜக திட்டமிட்டது.
  அதன்படி, 21 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம், மனோகர் பாரிக்கர் அளித்தார். இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
  காங்கிரஸ் வழக்கு: இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
  பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தாலேயே மாநிலத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோரவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தீவிரமாக வாதாடுவதற்குப் பதிலாக ஆளுநரிடம் பெரும்பான்மையைக் காட்டியிருந்தாலே காங்கிரஸ் கட்சியால் சுலபமாக ஆட்சியமைத்திருக்க முடியும். ஆனால் அதனை அக்கட்சி செய்யவில்லை.
  பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்னரே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துவதை ஏற்க முடியாது.
  மாநிலத்தின் முதல்வராக பாரிக்கர் பதவியேற்பதற்கு தடை விதிக்கவும் இயலாது. அதேநேரத்தில் வரும் 16-ஆம் தேதி கோவா பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறும், அதுதொடர்பான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநருக்கு உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
  பதவியேற்பு விழா: இதையடுத்து,மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்க்கிழமை மாலை பொறுப்பேற்றுக் கொண்டது.
  பாஜகவுக்கு ஆதரவளித்த மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியைச் சேர்ந்த சுதின் தவாலிகர், மனோகர் அஸ்கோன்கர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதேபோன்று கோவா ஃபார்வர்டு கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் விஜய் சர்தேசாய், வினோத் பாலிங்கர், ஜெயேஷ் சல்கோன்கர் ஆகியோரும் பாரிக்கர் அமைச்சரைவையில் இடம்பெற்றுள்ளனர்.
  மேலும், சுயேச்சை உறுப்பினர்களான கோவிந்த் கெளடே, ரோஹன் கெளந்தே ஆகிய இருவருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களைத் தவிர பாஜகவைச் சேர்ந்த ஃபிரான்சிஸ் டிசெளஸா, பாண்டுரங்க் மட்காய்க்கர் ஆகியோரும் அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்.
  கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மனோகர் பாரிக்கருக்கும், 9 அமைச்சர்களுக்கும் மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
  முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பாரிக்கர், "நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற பிறகு அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கப்படும்' என்றார். கோவா மாநில முதல்வராக பாரிக்கர் பதவியேற்பது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

  பிரதமர் வாழ்த்து

  முதல்வராகப் பதவியேற்ற பாரிக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
  முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட மனோகர் பாரிக்கருக்கும், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களுக்கும் வாழ்த்துகள். பாரிக்கர் தலைமையிலான அரசு, கோவா மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அந்தப் பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.

  ஆளுநர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

  ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக ஆளுநரைச் சந்தித்துப் பேசுவதற்கு தங்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
  இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பனாஜியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக பேச நேரம் ஒதுக்குமாறு ஆளுநரிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதி கோரியிருந்தனர். இதுதொடர்பான கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. இருந்தபோதிலும், எங்களுக்கு அழைப்பு விடுக்காமல், பாஜகவினரைச் சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கினார் என்றார் திக்விஜய் சிங்.
  இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 பேர் ஆளுநர் மிருதுளா சின்ஹாவை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சந்தித்துப் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai