சுடச்சுட

    

    அன்னிய செலாவணி விதிமீறல்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன்

    By DIN  |   Published on : 16th March 2017 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SyedAliShah

    அன்னிய செலாவணி நிர்வாகச் சட்டத்தின்கீழ் (பெமா) பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகும்படி, ஜம்மு-காஷ்மீர் மாநில பிரிவினைவாத தலைவர்களான சையது அலி ஷா கிலானி, யாசின் மாலிக் ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.
    இதுகுறித்து தில்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் புதன்கிழமை கூறியதாவது:
    கிலானிக்கு சொந்தமாக ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியில் உள்ள வீட்டில் கடந்த 2002-ஆம் ஆண்டு வருமான வரித்துறை நடத்திய சோதனையில் சுமார் ரூ.6.5 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக அவருக்கு எதிராக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது.
    இதேபோல், எம்.ஏ. தார், அவரது மனைவி ஆகியோரிடம் இருந்து ரூ.6.56 கோடி போலீஸாரால் கைப்பற்றப்பட்டது. அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர், அந்த பணத்தை மாலிக்கிடம் அளிக்கும்படி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து யாசின் மாலிக் மீது கடந்த 2001-ஆம் ஆண்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் யாசின் மாலிக்கை போலீஸார் கைது செய்தனர். எனினும், ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.
    இதனிடையே, இந்த 2 விவகாரம் தொடர்பாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தனித்தனியாக அன்னிய செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழ் 2 வழக்குகளைப் பதிவு செய்தனர். இருந்தபோதிலும், காஷ்மீரில் கடந்த 2014-ஆம் ஆண்டு நேரிட்ட வெள்ளப் பெருக்கில், இதுதொடர்பான ஆவணங்கள் அழிந்துப் போய்விட்டதால் வழக்கு விசாரணை தாமதமாயின.
    இந்நிலையில், இந்த 2 வழக்குகள் தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகும்படி கிலானிக்கும், மாலிக்கிற்கும் அமலாக்கத் துறை தனித்தனியே சம்மன்களை அனுப்பியுள்ளது.
    மாலிக்கிற்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில், ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வரும் 28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும், கிலானிக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai