Enable Javscript for better performance
அஸ்ஸாம் இளம்பாடகிக்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்கள் ஃபத்வா பிறப்பிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அஸ்ஸாம் இளம்பாடகிக்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்கள் ஃபத்வா பிறப்பிப்பு

    By DIN  |   Published on : 16th March 2017 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அஸ்ஸாமைச் சேர்ந்த இளம்பாடகி நஹீத் அப்ரீனுக்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்கள் ஃபத்வா உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
    விஸ்வநாத் மாவட்டம் விஸ்வநாத் சாரியாலி பகுதியில் வசித்து வருபவர் நஹீத் அப்ரீன். 10-ஆம் வகுப்பு பயின்று வரும் நஹீத், தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்ததால் அஸ்ஸாம் மாநில மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர். இதனிடையே, நாகோன் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் நஹீத் கலந்து கொள்வதற்கு எதிராக 46 முஸ்லிம் மதகுருமார்கள் ஃபத்வா உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு பல நகல்களாக எடுக்கப்பட்டு, ஹோஜாய், நாகோன் உள்ளிட்ட மாவட்டங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
    அஸ்ஸாம் முதல்வர் கண்டனம்: நஹீத் அப்ரீனுக்கு எதிராக ஃபத்வா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதற்கு அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனோவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இளம்பாடகி நஹீத் அப்ரீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் போதிய பாதுகாப்பு வழங்கும்படியும் போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
    எனினும், ஃபத்வா உத்தரவைக் கண்டு தாம் அச்சப்படவில்லை என்று நஹீத் அப்ரீன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ’கடவுளால் எனக்கு அளிக்கப்பட்ட பரிசு இசை; இதுபோன்ற நடவடிக்கைக்கு பணிந்து இசையை கைவிட மாட்டேன்' என்றார்.
    நஹீத் அப்ரீனுக்கு எதிராக துண்டுபிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் ஃபத்வா உத்தரவு தொடர்பான துண்டுபிரசுரங்களில் இடம்பெற்றிருக்கும் பெயர்களை உடைய நபர்களில் சிலர், அதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று மறுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai