சுடச்சுட

    

    உத்தரப் பிரதேச முதல்வராகப் போவது யார்? பாஜகவில் தொடர்ந்து மௌனம்

    By DIN  |   Published on : 16th March 2017 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிய பிறகும், முதல்வர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பதில் பாஜகவில் தொடர்ந்து மௌனம் நிலவி வருகிறது.
    உத்தரப் பிரதேச முதல்வராக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பதவியேற்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
    அதற்கு அவர் பதிலளிக்கையில், ’என்ன முட்டாள்தனமான கேள்வியை கேட்கிறீர்கள்' என்றார்.
    உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மௌரியா கூறுகையில், ’இன்னும் 2 முதல் 4 நாள்களில் அனைத்தும் தெரிந்துவிடும்' என்றார். லக்னௌவில் புதிய பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 16) நடைபெற இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியிருப்பது குறித்தும், முதல்வர் பதவிக்கு மௌரியாவின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக வெளியான செய்திகள் குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு மௌரியா கூறுகையில், ’லக்னௌவில் எம்எல்ஏக்கள் கூட்டம் வியாழக்கிழமை நடக்கவில்லை. முதல்வர் பதவிக்கு எனது பெயர் பரிசீலிக்கப்படுவதாக வெளியான செய்திகளை ஏற்பதற்குமில்லை; மறுப்பதற்குமில்லை' என்றார்.
    உத்தரப் பிரதேச மாநில உள்துறை ஐ.ஜி. ராம்குமார் கூறுகையில், ’லக்னௌவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் 17-ஆம் தேதி வரலாம் எனத் தெரிகிறது. அவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், புதிய அரசு பதவியேற்புக்கும், பிரதமரின் பயணத்துக்கும் தொடர்புள்ளதா? எனத் தெரியாது' என்றார்.
    ராஜ்நாத் சிங், மௌரியா தவிர்த்து மனோஜ் சின்ஹா, யோகி ஆதித்யநாத் உள்பட தற்போது எம்.பி.க்களாக இருக்கும் பாஜக தலைவர்களின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிபடுகின்றன. மூத்த எம்எல்ஏக்கள் சுரேஷ் கன்னா, சதீஷ் மஹனா, எம்எல்ஏக்கள் ஸ்ரீகாந்த் சர்மா, சித்தார்த் நாத் சிங், லக்னௌ மேயர் தினேஷ் ஷர்மா ஆகியோரின் பெயர்களும பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனினும், புதிய அரசு அமைப்பது குறித்து பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு மட்டுமே தெரியும்; வேறு யாருக்கும் தெரியாது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai