Enable Javscript for better performance
உ.பி.: பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவான பிரஜாபதி கைது- Dinamani

சுடச்சுட

    
    PRAJ

    பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளாகி தலைமறைவாகி இருந்த காயத்ரி பிரஜாபதியை புதன்கிழமை கைது செய்து அழைத்துச் சென்ற போலீஸார்.

    பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தலைமறைவாகி இருந்தவரும், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் அரசில் அமைச்சராக பதவி வகித்தவருமான காயத்ரி பிரஜாபதியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    பிரஜாபதியும், அவரது உதவியாளர்களும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனது மகளுக்கும் அவர்கள் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
    அந்த மனுவில், ’உத்தரப் பிரதேச அரசில் பிரஜாபதி அமைச்சராக இருப்பதால், அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய காவல் துறை முன்வரவில்லை. எனவே, பிரஜாபதி, அவரது உதவியாளர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரஜாபதி உள்ளிட்டோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறும், அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரப் பிரதேச காவல் துறைக்கு உத்தரவிட்டது.
    இதனைத் தொடர்ந்து, பிரஜாபதி, அவரது உதவியாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    இந்நிலையில், பிரஜாபதி தலைமறைவாகிவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரஜாபதியின் உதவியாளர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தலைமறைவான காயத்ரி பிரஜாபதி எங்கு இருக்கிறார் என்பதை அறிவதற்காக அவரது 2 மகன்கள் மற்றும் உறவினரிடமும் போலீஸார் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.
    அப்போது, அவர்கள் அளித்த தகவல்களைக் கொண்டு லக்னௌ நகரின் பல்வேறு இடங்களில் பிரஜாபதியை போலீஸார் தேடி வந்தனர்.
    இந்நிலையில், ஆஷியானா பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    பிரஜாபதியை பாதுகாக்கவில்லை-சமாஜவாதி: இதற்கிடையே, காயத்ரி பிரஜாபதியை சமாஜவாதி அரசு பாதுகாக்கவில்லை என உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் ஆட்சியை இழந்த அக்கட்சி தெரிவித்துள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai