சுடச்சுட

    

    கோவா, மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைத்த விவகாரம்: காங்கிரஸ் அமளியால் முடங்கியது மாநிலங்களவை

    By DIN  |   Published on : 16th March 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவா, மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைக்காமல், பாஜகவை ஆட்சியில் அமர்த்திய ஆளுநர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டதால் அவை முழுமையாக முடங்கியது.
    மாநிலங்களவை கூடியதும் இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதையடுத்து அவையின் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் 10 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைத்தார்.
    பின்னர் அவை கூடியபோது இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா பேசியதாவது: ஜனநாயக நாட்டில் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். உத்தரப் பிரதேசம், உத்தரகண்டில் பாஜக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். அதே நேரத்தில் பஞ்சாபில் பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் மணிப்பூர், கோவாவில் அதிக எம்எல்ஏ-க்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால், காங்கிரஸை ஆளுநர் நிராகரித்துவிட்டு, பாஜகவை ஆட்சியில் அமர்த்திவிட்டார். இதுபோன்ற விவகாரத்தில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. அதன்படி எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தனிப்பெரும் கட்சியைத்தான் முதலில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல்போனால்தான், இரண்டாவது பெரிய கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். ஆனால், மணிப்பூரிலும், கோவாவிலும் மக்களின் தீர்ப்பும், நீதியும் புறம்தள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசு கூறியபடி ஆளுநர் செயல்பட்டுள்ளார் என்றார்.
    இதையடுத்து பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ’ஆளுநர் குறித்து ஆனந்த் சர்மா பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்' என்றார்.
    இதைத் தொடர்ந்து, தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர் தற்கொலை விவகாரம் குறித்துப் பேச இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜாவுக்கு அவையின் துணைத் தலைவர் குரியன் அழைப்பு விடுத்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ஆளும் பாஜக தரப்பில் இருந்தும் பதில் கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் அவையில் தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
    பிற்பகலில் அவை கூடிய போது மீண்டும் கூச்சல், குழப்பம் நீடித்தது. மணிப்பூர், கோவா ஆளுநர்களை பதவி நீக்க வேண்டுமென்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு, பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ’கோவாவிலும், மணிப்பூரிலும் ஜனநாயக நடைமுறைகளின் படிதான் புதிய அரசுகள் அமைக்கப்பட்டுள்ளன' என்ரார். அவரது பதிலை காங்கிரஸ் எம்.பி.க்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து அமளி நீடித்தால் அவை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai