சுடச்சுட

    

    ஜேஎன்யு தமிழக மாணவர் உயிரிழந்த சம்பவம்: பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நீதி கிடைக்க நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி

    By DIN  |   Published on : 16th March 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) ஆராய்ச்சிப் படிப்பு பயின்று வந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட அவரது பெற்றோருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்தது.
    மக்களவை புதன்கிழமை தொடங்கியதும் இந்த விவகாரத்தை அதிமுக உறுப்பினர்கள் எழுப்பினர். அப்போது ஆரணி தொகுதி அதிமுக உறுப்பினர் ஏழுமலை, ’மாணவர் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.
    அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர் கொடிக்குனில் சுரேஷ் பேசுகையில், ’கடந்த ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் ரோஹித் வேமூலா தற்கொலை செய்து கொண்டார். அதுபோலவே தற்போது தில்லியிலும் ஒரு தமிழக மாணவர் உயிரிழந்துள்ளார். இது அதிர்ச்சி தரக் கூடிய விஷயம்' என்றார்.
    இதைத் தொடர்ந்து, அவையில் இருந்த காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ’இந்த விவகாரத்தில் மத்திய மனித வள úம்ம்பாட்டுத் துறை அமைச்சர் அவைக்கு வந்து பதிலளிக்க வேண்டும்' என்றனர்.
    இந்நிலையில், அவையில் இருந்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார், ’இச்சம்பவம் தொடர்பாக தில்லி காவல் துறை விசாரித்து வருகிறது. இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
    இதேபோல மாநிலங்களவையில் இதே விவகாரத்தை தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா எழுப்பினார். அப்போது அவர், ’மிகவும் துயரம் அளிக்கும் வகையிலும் மர்மமான முறையிலும் தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் உயிரிழந்துள்ள சம்பவம், நாட்டில் உள்ள மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் என்ன நடக்கிறது? என்ற சந்தேகத்தை மக்கள் மனங்களில் எழுப்புகிறது' என்றார்.
    திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், ’முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை விளக்கி எந்த கடிதமும் எழுதியதாகத் தகவல் இல்லை. அப்படியென்றால் உண்மையில் நடந்தது என்ன?' என்றார்.
    இதைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவை திமுக தலைவர் கனிமொழி, ’சமவுரிமை பாதிக்கப்படும் போது எல்லாமே மறுக்கப்படுகிறது என்று முத்துகிருஷ்ணன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் சேர ஓராண்டுக்கு முன்பே முயன்ற அந்த மாணவருக்கு (முத்துகிருஷ்ணன்) ஆங்கில புலமை குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து, நூலகத்தில் ஓராண்டு படித்து தயார்படுத்திக் கொண்ட பிறகு ஜேஎன்யுவில் அவர் சேர்ந்துள்ளார். அந்த அளவுக்கு ஈடுபாடு கொண்ட மாணவர், ஏன் தனது வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும்?' என்றார்.
    இதைத் தொடர்ந்து, அவையில் இருந்த மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன், ’மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதன் நகலை அவரது தந்தையிடம் அளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முத்துகிருஷ்ணனின் சகோதரிகளுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் என அவரது தந்தை கோரியுள்ளார். இது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கியுள்ளேன். முத்துகிருஷ்ணனின் தந்தை கோரிக்கை பரிசீலிக்கப்படும். பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்துக்கு உரிய நீதி கிடைக்கும்' என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai