சுடச்சுட

    
    anandipen

     

    ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் இப்போது மீண்டும் தமிழகத்தின் ஆளுநராக யாரை நியமிப்பது என்கிற விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் அலுவலகத்துடனும் பா.ஜ.க. கட்சித் தலைமையுடனும் தீவிரமாக கலந்தாலோசித்து வருவதாகத் தெரிகிறது.
    தமிழகத்தின் ஆளுநராக இருந்த கே. ரோசையாவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து உடனடியாக வேறு ஆளுநர் நியமிக்கப்படாமல் மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவிடம் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை அதாவது ஆறரை மாதங்களாக நிரந்தரமான ஆளுநர் நியமிக்கப்படாமல் வித்யாசாகர் ராவின் பொறுப்பிலேயே தமிழகம் தொடர்கிறது.
    இந்த இடைப்பட்ட காலத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அதைத் தொடர்ந்து அவரது மறைவு, புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வத்தின் நியமனம், அவரது ராஜிநாமா, ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடியது,.கே. சசிகலா அ.தி.மு.க. சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும் ஆளுநர் அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் கிடப்பில் போட்டது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அவர் உள்பட நான்கு பேரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து தண்டனையை உறுதி செய்தது, எடப்பாடி கே. பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது என பல மிக முக்கியமான சம்பவங்கள் நடந்தேறின. இவையெல்லாமே நிரந்தரமான ஆளுநர் இல்லாத நிலையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் தலைமையில் நடந்திருக்கின்றன.
    ஏழு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட, இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான தமிழகம், இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இத்தனை மாதங்கள் நிரந்தரமான ஆளுநர் இல்லாமல் இருந்தது இல்லை. தமிழகம் மட்டுமல்ல இநதியாவின் எந்த முக்கியமான மாநிலமும் இத்தனை மாதங்கள் தொடர்ந்து பொறுப்பு ஆளுநரின் கீழ் தொடர்ந்தது கிடையாது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் பிரச்னை எழுப்பவில்லை என்பதை சில வடநாட்டு பத்திரிகைகள்கூட குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
    தமிழகத்தின் ஆளுநராக வருவதற்கு தான் தயாராக இருப்பதாக சுப்பிரமணியம் சுவாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவது வழக்கம் இல்லை என்பதால் அவரது விருப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது.
    இதற்கிடையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த ஆனந்தி பென் படேல் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்கிற தகவல் கசிந்தது. ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதே ஆனந்தி பென் படேலை தமிழகத்தின் ஆளுநராக நியமிப்பதில் அவருக்கு ஆட்சேபணை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது மீண்டும் தமிழகத்தின் ஆளுநராக ஆனந்தி பென் படேலை நியமிப்பது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
    ஆனால், தனக்கு தமிழ் தெரியாது என்பதாலும் ஆங்கிலத்தில் சரளமான ஆளுமை இல்லை என்பதாலும் ஆனந்தி பென் படேல் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்படுவதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள். தனக்கு மகாராஷ்டிரா ஆளுநர் பதவி தரப்பட்டால் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இல்லை என்று அவர் தெரிவித்திருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.


    வித்யாசாகர் ராவை தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக நியமித்து ஆனந்தி பென் படேலை மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால், இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் மகாராஷ்டிர ஆளுநராக இருப்பதைத்தான் வித்யாசாகர் ராவ் விரும்புகிறார் என்றும் அவர் தமிழகத்தின் முழு நேர ஆளுநராக வருவதில் தயக்கம் காட்டுகிறார் என்றும் கூறப்படுகிறது. அதனால் தமிழகத்திற்கு ஆளுநராக யாரை நியமிப்பது என்பதில் பா.ஜ.க. தலைமையும் உள்துறை அமைச்சகமும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai