Enable Javscript for better performance
பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் இன்று பதவியேற்கிறார்- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் இன்று பதவியேற்கிறார்

    By DIN  |   Published on : 16th March 2017 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    AmarinderSingh

    பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அமரீந்தர் சிங் வியாழக்கிழமை (மார்ச் 16) பதவியேற்கவுள்ளார். அவருடன் சில எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்கலாம் எனத் தெரிகிறது.
    பஞ்சாப் ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை காலை நடைபெறும் விழாவில், அமரீந்தர் சிங்குக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் ஆளுநர் வி.பி. சிங் பட்னூர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைப்பார்.
    பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் பதவியேற்பது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன்பு பஞ்சாப் முதல்வராக கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அவர் பதவி வகித்துள்ளார். அதையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
    அமைச்சரவையில் யார்-யார் சேர்த்து கொள்ளப்படவுள்ளனர் என்பது குறித்து காங்கிரஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், பாஜகவில் இருந்து விலகி சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து, மன்பீரித் சிங் பாதல் உள்ளிட்டோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன. அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் அமைச்சரவை இருக்கும் என்றும் அந்த வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டன.
    அமரீந்தர் சிங் தலைமையிலான அரசு பதவியேற்கும் விழாவை மிகவும் எளிமையாக நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தில்லியில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை செவ்வாய்க்கிழமை சந்தித்து தனது அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு அமரீந்தர் சிங் அழைப்பு விடுத்திருந்தார். எனவே அமரீந்தர் சிங் அரசு பதவியேற்கும் விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பஞ்சாப் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77-இல் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் (15)-பாஜக (3) கூட்டணி 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai