Enable Javscript for better performance
பெங்களூரில் ’நமது உணவகம்' தொடங்கப்படும்: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் ’நமது உணவகம்' தொடங்கப்படும்: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

    By DIN  |   Published on : 16th March 2017 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் அம்மா உணவகம் செயல்படுவது போல பெங்களூரில் 198 வார்டுகளிலும் ’நமது உணவகம்' தொடங்கப்படும் என கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    கர்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை 2017-18-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்து பேசியது:
    பெங்களூரு மாநகராட்சியில் ரூ. 690 கோடியில் 43 முக்கியச் சாலைகள் நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்படும். டெண்டர் ஷூர் திட்டத்தில் நகரின் மத்திய பகுதியில் உள்ள 25 முக்கிய இணைக்கும் சாலைகள் ரூ. 250 கோடியில் மேம்படுத்தப்படும்.
    போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள 12 இடங்களில் ரூ. 150 கோடியில் வளர்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ. 200 கோடியில் 200 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபாதைகள் மேம்படுத்தப்படும். 9 சதுக்கங்களில் ரூ. 421 கோடியில் சாலை வகை பிரிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தேவையான இடங்களில் ரூ. 150 கோடியில் ரயில் மேம்பாலம், சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்.
    ரூ. 300 கோடியில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்படும். போக்குவரத்து பொறியியல் பணிகளுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியாருடன் இணைந்து நடைமேம்பாலம் அமைக்க ரூ. 80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    ரூ. 50 கோடியில் ஆயிரம் கழிவறைகள் கட்டப்படும். முதல்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும். 75.095 கி.மீட்டருக்கான 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ரூ. 26,405 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
    மைசூரு சாலையிலிருந்து கெங்கேரி வரையும், புட்டேனஹள்ளியிலிருந்து அஞ்சனாபுரம் வரையிலும் மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 4,200 கோடியில் பட்டு வாரியத்திலிருந்து கே.ஆர்.புரம் வரை 17 கி.மீட்டர் தொலைவுக்கு புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும்.
    3-ஆம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதையின் மூலம் சர்வதேச விமான நிலையத்தை இணைக்கும் பணிகளுக்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. பெங்களூரு மாநகரின் போக்குவரத்தைக் குறைக்க ரூ. 345 கோடியில் புறநகர் ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். பெங்களூரில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சைக்கிள் பயணத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
    நமது உணவகம்: பெங்களூரு மாநகராட்சியின் 198 வார்டுகளிலும் தமிழக மாதிரியில் நமது உணவகம் திட்டம் அறிமுகம் செய்யப்படும். அனைத்து வார்டுகளிலும் தலா ஒரு நமது உணவகம் அமைக்கப்படும். இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டி ரூ.5-க்கும், மதியம், இரவு உணவுகள் ரூ. 10-க்கும் விற்கப்படும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai