சுடச்சுட

    

    மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 16th March 2017 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Kejrival

    பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் நடைபெற்ற முறைகேடுதான் காரணம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
    பஞ்சாபில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 24.9 சதவீத வாக்குகளைப் பெற்ற ஆம் ஆத்மி 20 இடங்களில் வெற்றி பெற்றது. அங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அகாலி தளம் - பாஜக கூட்டணி மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
    இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய கேஜரிவால் கூறியதாவது:
    எங்கள் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளில் 20 முதல் 25 சதவீத வாக்குகள் அகாலி தளம் - பாஜக கூட்டணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளது. எனவேதான் அவர்கள் 30 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
    தேர்தல் முடிவு என்பதை நமது புரிதல்களுக்குள் வரவில்லை. இதனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளும் எழுகின்றன. பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைக்கும் என்பதுதான் அனைவரது கணிப்பாகவும் இருந்தது.
    ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்தை கைப்பற்றக் கூடாது என்ற நோக்கத்தில் எங்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு அதிகமிருந்த பஞ்சாபில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. எனினும், தேர்தலில் கட்சியின் தோல்விக்கு நான் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
    எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்ய வாக்காளர்களுக்கு காகிதம் மூலம் உறுதிச் சான்று அளிக்கப்பட்ட இடங்களில், அந்த சான்றுகள் மூலம் ஆய்வு நடத்த வேண்டும். தேர்தல் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால் ஜனநாயகம் என்பது இருக்காது. அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் கூட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்றார்.
    மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட 2015-ஆம் ஆண்டு தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதே? என்ற கேள்விக்கு, ’அப்போது அதீத நம்பிக்கையுடன் இருந்த பாஜகவினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யாமல் இருந்திருக்கலாம்' என்றார் கேஜரிவால்.
    ’கேஜரிவாலுக்கு மனநிலை பாதிப்பு': ’தேர்தல் தோல்வியால் கேஜரிவாலுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது; அதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று அவர் கூறி வருகிறார். பஞ்சாப் மக்கள் ஆம் ஆத்மியை தூக்கி வீசி விட்டனர். இனி அவர் தில்லியில் மட்டும் கட்சி விவகாரங்களை கவனிக்கலாம்' என்று மத்திய அமைச்சரும், அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மனைவியுமான ஹர்சிம்ரத் கெளர் பாதல் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai