Enable Javscript for better performance
ரூபாய் நோட்டு வாபஸ்: 1,100 இடங்களில் வருமான வரித் துறை சோதனை: மத்திய அரசு தகவல்- Dinamani

சுடச்சுட

    

    ரூபாய் நோட்டு வாபஸ்: 1,100 இடங்களில் வருமான வரித் துறை சோதனை: மத்திய அரசு தகவல்

    By DIN  |   Published on : 16th March 2017 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    500

    ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் 1,100 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இதுதொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
    கருப்புப் பணப் பதுக்கலுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருமான வரித் துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தியும், கணக்கில் வராத பணப் பரிமாற்றங்களை கண்காணித்தும் வருகின்றனர்.
    கடந்த 2014 ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வருமான வரித் துறையினர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் வாயிலாக ரூ.60,000 கோடி கணக்கில் வராத பணம் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் ரூ.2,607 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
    இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன.
    நாடு முழுவதும் சுமார் 1,100 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். ரூ.610 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகள் கண்டறியப்பட்டன. அவற்றில் ரூ.513 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    மேலும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு கணக்கில் வராத வகையில் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டவர்களிடம் உரிய விளக்கமளிக்குமாறு 5,100 அறிவிக்கைகளை வருமான வரித் துறை அனுப்பியுள்ளது.
    அவர்களில் சிலர் ரூ.5,400 கோடி கருப்புப் பணத்தை வரி ஏய்ப்பு செய்து மறைத்து வைத்திருப்பதாக ஒப்புக் கொண்டனர் என்றார் சந்தோஷ் குமார் கங்வார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai