சுடச்சுட

  

  வாக்குப் பதிவு இயந்திர முறைகேடு புகார்: வழக்குத் தொடுக்க மாயாவதி முடிவு

  By DIN  |   Published on : 16th March 2017 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mayavathi

  உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பதற்கு, வாக்குப் பதிவு இயந்திர முறைகேடுதான் காரணம் என்று மீண்டும் குற்றம் சாட்டியுள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக லக்னெளவில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் மேலும் கூறியதாவது: வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்திருப்பதன் மூலமே பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் எங்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாருக்கு தகுந்த பதில் கிடைக்கவில்லை. ஆகையால் எதிர்காலத்தில் இதுபோன்ற மோசடி நடைபெறுவதைத் தடுக்கவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் இப் பிரச்சனை தொடர்பாக வழக்குத் தொடுக்க எனது கட்சி முடிவெடுத்துள்ளது.
  மேலும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மார்ச் 11-ஆம் தேதியன்று நடந்த ஜனநாயகப் படுகொலையை நினைவுகூரும் வகையில், மாதந்தோறும் 11-ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க பகுஜன் சமாஜ் முடிவு செய்துள்ளது. இதன்படி உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும், பிற மாநிலத் தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். முதல் ஆர்ப்பாட்டம் அடுத்த மாதம் 11-ஆம் தேதி நடைபெறும்.
  முஸ்லிம்கள், தலித்துகள் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளிலும் பாஜக பெரும் வெற்றி பெற்றிருப்பதே, வாக்குப் பதிவு இயந்திர முறைகேட்டுக்குச் சான்று. தலாக் விவகாரத்தால் முஸ்லிம் பெண்கள் பாஜகவை ஆதரித்திருப்பதாக அக்கட்சியினர் கூறுவதை ஏற்க இயலாது. ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட தேர்தலில் நிறுத்தாத பாஜகவுக்கு மதநம்பிக்கை மிகுந்த முஸ்லிம் பெண்கள் எப்படி வாக்களித்திருப்பார்கள்?
  இதேபோல் வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்திருந்தால் பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றிருக்குமே என்று அக்கட்சியினர் கேட்கின்றனர். ஆனால், உத்தரப் பிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்த பெரிய மாநிலம் என்பதால் இங்கு அதனை அரங்கேற்றியுள்ளனர்.
  பாஜக நேர்மையான கட்சி என்றால் இந்தத் தேர்தலை ரத்து செய்துவிட்டு, வாக்குச் சீட்டு முறையில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றார் மாயாவதி.
  பாஜக பதிலடி
  வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது அபாண்டமாகக் குறை கூறுவதற்குப் பதிலாக மக்கள் தீர்ப்பை மாயாவதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ’’வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை. மாயாவதியின் புகார் அடிப்படையற்றது என தேர்தல் ஆணையமே கூறிவிட்டது. தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்றால் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியானவை என்றும், தோற்றுவிட்டால் மோசடி என்றும் கூறுவது சரியல்ல. குறை மாயாவதியிடம்தான் இருக்கிறது. அவர் மக்கள் தீர்ப்பை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்'' என்றார்.
  இதனிடையே, உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மெளர்யா கூறியபோது, ’மாயாவதி தலித்துகளை ஆதரிக்கவில்லை, பணம் படைத்தவர்களையே ஆதரித்தார்; அதனால்தான் படுதோல்வி அடைந்துள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai