சுடச்சுட

  

  வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி குற்றங்கள் அதிகரித்துள்ளதா? மக்களவையில் மத்திய அரசு பதில்

  By DIN  |   Published on : 16th March 2017 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vk-sing

  கடந்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்கா உள்பட வெளிநாடுகள் பலவற்றில் இந்தியர்களுக்கு எதிராக இன, மதவெறி ரீதியிலான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் ஏதும் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாக நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் மற்றும் சுப்ரியா சுலே, எம்.பி. ராஜேஷ், தனஞ்சய் பீம்ராவ் மகாதிக், ராஜீவ் சங்கராவ் சத்தவ் உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் மக்களவையில் புதன்கிழமை அளித்த பதில் விவரம் வருமாறு:
  அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியர்களுக்கு எதிராக இனவெறி மற்றும் மத ரீதியிலான குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கான தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை. எனினும், அமெரிக்கா உள்பட பல நாடுகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
  அவற்றில் கடந்த 2015, பிப்ரவரியில் அமெரிக்காவில் உள்ள அலபமாவில் போலீஸாரின் நடவடிக்கையால் ஓர் இந்தியர் காயமடைந்தார். 2015, ஜனவரியில் அமெரிக்காவில் உள்ள மிர்டெல் கடற்கரையில் கொள்ளை முயற்சியின் போது இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் 2015, டிசம்பர் 14-ஆம் தேதி இந்திய உணவக உரிமையாளர் தாக்கப்பட்டார். மெல்போர்னில் 2016, மார்ச் 3-ஆம் தேதி 13 வயது சீக்கிய சிறுவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபோன்ற சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
  வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்களின் உயிர், உடைமைக்குப் பாதுகாப்பு அளிப்பதில் இந்தியா மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது என்றார் வி.கே. சிங்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai