2ஜி: குற்றச்சதிக்கு என்ன ஆதாரம்? சிபிஐக்கு சிறப்பு நீதிபதி கேள்வி
By DIN | Published on : 16th March 2017 01:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
’2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் என்ன?' என்று சிபிஐ தரப்பு வழக்குரைஞரிடம் தில்லி சிபிஐ நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கின் இறுதி கட்ட வாதங்கள் தற்போது சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை சிறப்பு நிதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, சிபிஐ சார்பில் அதன் சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் வாதிட்டார்.
அப்போது அவர், அலைக்கற்றை வழங்க தேதி நிர்ணயம் செய்தது, பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பாமல் ரகசியமாக வைத்திருந்தது, பிரதமரை தவறாக வழிநடத்தியது, குற்றம்சாட்டப்பட்ட நபர்களோடு தொடர்பில் இருந்தது ஆகியவை குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மீதான குற்றச்சாட்டுகள் என்றார்.
அப்போது குறுக்கிட்ட சிறப்பு நீதிபதி சைனி, கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை இந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட காலத்தில் என்ன வாதத்தை முன்வைத்தீர்களோ அதையேதான் தற்போதும் முன்வைத்து வருகிறீர்கள். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு முன்வைத்த வாதங்களுக்கு உரிய உங்கள் விளக்கத்தை நீங்கள் சரியான முறையில் அளிக்கவில்லை.
கடந்த ஆறு ஆண்டு கால விசாரணையின் போது உங்கள் வாதங்களின் குறுக்கே நான் கேள்வி எழுப்பியது இல்லை. ஆனால், தற்போது இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போதைய சூழலில் நீதிமன்றத்துக்கு எழும் சந்தேகங்களை எழுப்பாமல் இருக்க முடியாது. இரு தரப்பிலும் நீதி வழங்க இந்தக் கேள்விகள் அவசியமாகிறது என்றார். இதற்கு ஆனந்த் குரோவர், இதுபோன்ற கேள்விகளை நானும் வரவேற்கிறேன் என்றார்.
இதையடுத்து, சிறப்பு நீதிபதி சைனி, ஆனந்த் குரோவரிடம் எழுப்பிய கேள்விகள் வருமாறு: தேதி நிர்ணயம் செய்த கோப்பில் ஆ. ராசா கையெழுத்திட்ட பிறகும், அந்த முடிவு குறித்து மேலும் விவாதிக்க விரும்புவதாகவும் அதற்கு ராசா ஒப்புக் கொண்டதாகவும் சம்பந்தப்பட்ட துறையின் (தொலைத் தொடர்பு) செயலாளர் கோப்பில் பதிவு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் மீண்டும் துறை அலுவலர்களுடன் அமைச்சர் என்ற முறையில் ராசா விவாதித்ததற்கான விவரம் கோப்பில் உள்ளது. மீண்டும் விவாதம் நடத்தி ஒப்புதல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகளால் கோப்பு இறுதி செய்யப்பட்டதோ அப்போதே குற்றம்சாட்டப்பட்ட நபரான ராசா மீதான சதி குற்றச்சாட்டு நீர்த்துப் போய் விடாதா?.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவரை ராசா தவறாக வழிநடத்தியதாக வாதிடுகிறீர்கள். அந்தக் கடிதத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே. நாயர், பிரதமர் அலுவலகச் செயலாளர் புலோக் சாட்டர்ஜி, தொலைத் தொடர்புத் துறைய கவனிக்கும் கூடுதல் செயலாளர் வின்னி மகாஜன் ஆகியோர் கையெழுத்திட்டு பரிசீலித்துள்ள ஆவணங்கள் நீதிமன்றத்தில் உள்ளது.
அந்த அலுவலர்களை இதுவரை விசாரணைக்காக நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜர்படுத்தத் தவறியது ஏன்?. அவர்களிடம் ஏன் விசாரிக்கவில்லை?
தகுதியில்லாத நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததாக வாதிடுகிறீர்கள். தகுதியான நிறுவனங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு அவற்றுக்கு உரிமங்கள் வழங்கப்பட வேண்டும் என துறைக் கோப்பில் ராசா கையெழுத்திட்டுள்ளார். அந்த அதிகாரிகள் அனைவரும் சிபிஐ தரப்பு சாட்சிகளாக உள்ளனர்.
இதில் ராசா சதி செய்திருந்தால், அந்த உத்தரவை அவர் பிறப்பித்திருக்க வேண்டிய அவசியம் என்ன என்று சிறப்பு நீதிபதி சைனி கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து தனது தரப்பு பதிலை தெரிவிக்க சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு (மார்ச் 16) ஒத்திவைக்கப்பட்டது.