Enable Javscript for better performance
அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான உத்திகள்: பாஜக எம்.பி-க்கள் குழுக் கூட்டத்தில் ஆலோசனை- Dinamani

சுடச்சுட

  

  அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான உத்திகள்: பாஜக எம்.பி-க்கள் குழுக் கூட்டத்தில் ஆலோசனை

  By DIN  |   Published on : 17th March 2017 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi

  தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கும் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா.

  தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில், வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து, ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து மக்களிடையே பிரசாரம் செய்ய இளைஞர்களை நல்லெண்ணத் தூதர்களாகப் பயன்படுத்தும்படி கட்சியின் மூத்த தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.
  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலப் பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முதன்முறையாக தில்லியில் வியாழக்கிழமை கூடியது. இக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள், முடிவுகள் குறித்து, மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அனந்த் குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  டாக்டர் அம்பத்கரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் வகையில், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல், பாஜக சார்பில் பல்வேறு வாராந்திர விழாக்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், கட்சியின் நிறுவன நாளான வரும் ஏப்ரல் 6-ம் தேதி, தூய்மை இந்தியா திட்டத்தில் கட்சியின் உயர்நிலைத் தலைவர்களும், தொண்டர்களும் பெருவாரியாகப் பங்கேற்று தூய்மைப் பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
  மின்னணுப் பணப் பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்வதற்காக மத்திய அரசு உருவாக்கியுள்ள ’பீம்' செயலி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கட்சித் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும் டாக்டர் அம்பேத்கரின் பணிகள் மற்றும் பங்களிப்புகள் குறித்த நூல்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
  'தற்கால இளைஞர்கள் செய்தித்தாள், தொலைக்காட்சிகளைவிட செல்லிடப்பேசிகளையே மிகவும் சார்ந்துள்ளனர். ஆகையால் செல்லிடப்பேசிகள் மூலம் இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே கட்சி மற்றும் அரசின் பணிகளையும், திட்டங்களையும் கொண்டு சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் நல்லாட்சியையும், மக்கள் நலத் திட்டங்களையும் பொதுமக்களிடையே பிரசாரம் செய்யும் நல்லெண்ணத் தூதுவர்களாக இளைஞர்களை உருவாக்க வேண்டும்' என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
  கூட்டத்தில் பேசிய கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, ’உத்தரப் பிரதேசத்தில் ஜாதியவாதம், குடும்ப ஆட்சி, ஊழல் ஆகியவற்றுக்கு எதிராகவும் பிரதமர் மோடியின் தலைமை மற்றும் நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்தும் பாஜகவுக்கு மக்கள் அபார வெற்றியைத் தந்துள்ளனர்; இதேபோல் அடுத்த பெரும் சவாலாக விளங்கும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவதற்கான முன்னேற்பாடுகளை கட்சிப் பிரமுகர்கள் இப்போதே தொடங்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.
  நன்றி கூறும் தீர்மானம்: இக் கூட்டத்தில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றியைத் தேடித் தந்த வாக்காளர்களுக்கும், பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரின் தலைமையில் அயராது பாடுபட்ட கட்சித் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநிலங்களில் பாஜக அரசுகள் நல்லாட்சியைத் தந்து, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றும் என அத் தீர்மானத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
  இந்தத் தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வழிமொழிய, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று அனந்த் குமார் கூறினார்.
  கூட்டத்தின் முடிவில், அனைவருக்கும் திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai