சுடச்சுட

    

    உ.பி. பேரவை சமாஜவாதி குழுத் தலைவர் யார்? அகிலேஷுக்கு தேர்வு செய்யும் அதிகாரம்

    By DIN  |   Published on : 17th March 2017 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    akilesh

    உத்தரப் பிரதேச சட்டப் பேரவை சமாஜவாதி குழுத் தலைவரைத் தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அக்கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் வழங்கியுள்ளனர்.
    மொத்தம் 403 எம்எல்ஏக்கள் பலம் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் சமாஜவாதி கட்சி 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று, ஆட்சியை இழந்தது. அக்கட்சி சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களின் கூட்டம் லக்னௌவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், அவரது சித்தப்பா சிவபால் யாதவ், மூத்த தலைவர் ஆஸம் கான் மற்றும் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
    இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கட்சி எம்எல்ஏ பாரஸ்நாத் யாதவ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    நாங்கள் நடத்தியது ஆய்வுக்கூட்டம் அல்ல. மாறாக, ஹோலி பண்டிகைக்குக் பிறகு எம்எல்ஏக்கள் அனைவரும் நடத்திய சந்திப்பாகும். இக்கூட்டத்தில், மாநில சட்டப் பேரவை சமாஜவாதி குழுத் தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை அகிலேஷ் யாதவுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம். மேலும் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தை வரும் 25-ஆம் தேதி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் பாரஸ்நாத் யாதவ்.
    அவரைத் தொடர்ந்து, கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌதரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    எதிர்மறையானதொரு சூழலிலும் வெற்றி பெற்றதற்காக புதிய எம்எல்ஏக்களுக்கு அகிலேஷ் வாழ்த்து கூறினார். தேர்தலின்போது பிரதமரும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் மக்களைத் தவறாக வழிநடத்தியதோடு ஜனநாயகத்தின் குரலைத் தடுத்ததையும் மீறி சமாஜவாதி கட்சி 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    மாநிலத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுமாறும், சோஷலிஸக் கொள்கைகளின் அடிப்படையில் தொடர்ந்து போராடுமாறும் எம்எல்ஏக்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.
    முக்கிய எதிர்க்கட்சியாக சமாஜவாதி உருவெடுத்திருப்பதால் அக்கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவர்தான் பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு
    சமாஜவாதி செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சௌதரி, செய்தியாளர்களிடம் கூறுகையில், ’சட்டப் பேரவைத் தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் புகார் எழுப்பினர். பாஜகவிடம் சமாஜவாதி கட்சி தோற்றதற்கு இந்த முறைகேடுதான் காரணம் என்று தெரிவித்த அவர்கள், தங்களின் இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். எதிர்காலத்தில் தேர்தல்கள் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட வேண்டும் என்பதே எம்எல்ஏக்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது' என்றார்.
    முன்னதாக, உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளைச் செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சில தினங்களுக்கு முன் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai