சுடச்சுட

  

  கோதுமைக்கு இறக்குமதி வரி ரத்து: மாநிலங்களவையில் மத்திய அரசு - எதிர்க்கட்சிகள் வாக்குவாதம்

  By DIN  |   Published on : 17th March 2017 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோதுமை மற்றும் பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தது தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே மாநிலங்களவையில் வியாழக்கிழமை கடும் வாக்குவாதம் எழுந்தது.
  மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியதால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
  மாநிலங்களவையில் வியாழக்கிழமை காலை, உடனடி கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் சரத் யாதவ் விவசாயிகள் பிரச்னையை எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:
  கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,625 என மத்திய அரசு நிர்ணயித்தது. அதேபோன்று பருப்பு வகைகளைப் பொருத்தவரை குவிண்டாலுக்கு ரூ.4,527 முதல் ரூ.4,850 வரை நிர்ணயிக்கப்பட்டது.
  இந்தச் சூழலில் வெளிநாடுகளில் இருந்து வரும் கோதுமை மற்றும் பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரியை முற்றிலுமாக மத்திய அரசு ரத்து செய்தது. இதனால், குறைந்தபட்ச ஆதரவு விலையைக் காட்டிலும் மலிவான விலைக்கு வெளிச் சந்தைகளில் வேளாண் பொருள்களை விற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
  இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான சீதாராம் யெச்சூரி, ’வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றரை மடங்காக உயர்த்தித் தரப் போவதாகக் கூறி பாஜக ஆட்சிக்கு வந்தது; ஆனால், அதைக் காட்டிலும் குறைவான விலைக்கு தங்களது உற்பத்திப் பொருள்களை விற்க வேண்டிய நிலை தற்போது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்.
  இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசுகையில், ’இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் முறைப்படி நோட்டீஸ் கொடுக்கலாம்; அதை விடுத்து மத்திய அரசின் மீது அநியாயமாக பழி சுமத்தக் கூடாது' என்றார்.
  இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ’சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் எவரும் அவையில் இல்லாத நிலையில், வெங்கய்ய நாயுடு இந்த விவகாரத்தில் பதிலளிப்பது ஏன்? அனைத்து விவகாரங்களிலும் தலையிடுவது அவருக்கு வழக்கமாகிவிட்டது' என்றார்.
  இதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இதனால் அவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.
  மீண்டும் சலசலப்பு: இதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி பகுதியில் குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் பாஜக பெண் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் ரஜனி படேல் பேசினார். அப்போது பாஜக எம்.பி.க்களைக் குறிப்பிடும் வகையில் சில கருத்துகளை அவர் தெரிவித்ததாகத் தெரிகிறது.
  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.பி. ரூபா கங்குலி, இந்த விவகாரத்தில் சம்பந்தமே இல்லாமல் தனிப்பட்ட முறையில் தம்மை குற்றம்சாட்டி காங்கிரஸ் எம்.பி. பேசுவதாகக் கூறினார். இது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதத்துக்கு வித்திட்டது.
  இதைத்தொடர்ந்து பேசிய மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், ’மறைமுகமாகவோ, நேரடியாகவோ சம்பந்தப்பட்ட எம்.பி.யைக் குற்றம்சாட்டும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும்' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai