Enable Javscript for better performance
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு டைட்லரிடம் உண்மை கண்டறியும் சோதனை? சிபிஐ வாதத்தை 30 இல் விசாரிக்- Dinamani

சுடச்சுட

    

    சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு டைட்லரிடம் உண்மை கண்டறியும் சோதனை? சிபிஐ வாதத்தை 30 இல் விசாரிக்கிறது நீதிமன்றம்

    By DIN  |   Published on : 17th March 2017 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    court1

    தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984-இல் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரும் சிபிஐ-யின் மனுவை தில்லி நீதிமன்றம் வரும் 30-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
    தில்லியில் கடந்த 1984-இல் அப்போதைய பிரதமர் இருந்த இந்திரா காந்தியை அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரான சீக்கியரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, தில்லியிலும், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களிலும் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
    கலவரச் சம்பவங்களில் ஒன்றான, வடக்கு தில்லி புல்பங்காஷ் குருத்வாரா பகுதியில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றம்சாட்டப்பட்டது. சீக்கியர்களைக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டதாக வழக்கில் குறிப்பிடப்பட்டது.
    இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, டைட்லருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்று கூறி வழக்கை முடித்துக் கொள்வதாக வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று முறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. எனினும் இவ்வழக்கை விசாரித்து வந்த தில்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து, மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
    இந்நிலையில், ஜெகதீஷ் டைட்லரிடமும், இவ்வழக்கில் முக்கிய சாட்சியான ஆயுதத் தரகர் அபிஷேக் வர்மாவிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிபிஐ கோரிக்கை வைத்தது. இதற்கு டைட்லர் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். எனினும், டைட்லர் இச்சோதனைக்கு ஒப்புக் கொண்டால் தாமும் இச்சோதனைக்கு ஒப்புக் கொள்வதாக அபிஷேக் வர்மா தெரிவித்திருந்தார். இவ்வாறு நிபந்தனை விதிப்பதை ஏற்க முடியாது என்று சிபிஐ தரப்பு தெரிவித்திருந்தது.
    டைட்லரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக சிபிஐ அனுமதி கோரிய மனு நீதிபதி சிவாலி சர்மா முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை வரும் 30-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக
    நீதிபதி அறிவித்தார். மேலும் இவ்வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த நிலவர அறிக்கையை அன்றைய தினம் தாக்கல் செய்யுமாறும் அவர் சிபிஐக்கு உத்தரவிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai