சுடச்சுட

    

    நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்

    By DIN  |   Published on : 17th March 2017 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    parikar

    கோவா சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்றது.
    40 உறுப்பினர்கள் அடங்கிய கோவா சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 13 இடங்களில் வென்றது. இதர கட்சியினரும், சுயேச்சைகளும் 10 இடங்களில் வெற்றி பெற்றனர்.
    இந்நிலையில் பாஜக, இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியது. இக்குழுவின் சார்பில், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முதல்வர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    இதையடுத்து, மனோகர் பாரிக்கர் தமது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர், அவர் கடந்த 14-ஆம் தேதி கோவாவின் முதல்வராகப் பதவியேற்றார். மேலும், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
    முன்னதாக, பாஜகவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராக பதவியேற்க தடை விதிக்க மறுத்ததுடன், சட்டப் பேரவையில் வியாழக்கிழமை (மார்ச் 16) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
    இதன்பேரில், கோவா சட்டப் பேரவை வியாழக்கிழமை கூடியது. பாஜக உறுப்பினர் சித்தார்த் குன்கோலியேன்கர் தாற்காலிக அவைத் தலைவராக செயல்பட்டார்.
    தொடர்ந்து, முதல்வர் மனோகர் பாரிக்கர் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது, காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப்சிங் ராணே, ஒழுங்குப் பிரச்னையொன்றை எழுப்ப முயன்றார். எனினும், அவைத் தலைவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
    பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அரசுக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் பதிவாகின.
    இதில், அரசுக்கு ஆதரவாக பாஜக-வின் 12 உறுப்பினர்களும் (அவைத் தலைவர் நீங்கலாக), கோவா ஃபார்வர்ட் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும், மகாராஷ்ட்ரவாதி கோமந்தக் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும், சுயேச்சைகள் 3 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினரும் வாக்களித்தனர்.
    காங்கிரஸ் கட்சியின் 17 உறுப்பினர்களில், 16 உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அக்கட்சி உறுப்பினர் விஸ்வஜித் ராணே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
    முன்னதாக, அனைத்து உறுப்பினர்களும் எம்எல்ஏ-க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
    வாக்கெடுப்புக்குப் பின்னர், அவையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தாற்காலிக அவைத் தலைவர் அறிவித்தார்.
    மேலும், அன்றைய தினம் புதிய அவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், மார்ச் 23-ஆம் தேதி ஆளுநர் உரையும், 24-ஆம் தேதி பட்ஜெட் தாக்கலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா: இதனிடையே, வாக்கெடுப்பில் பங்கேற்காத காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வஜித் ராணே, தமது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மேலும், அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: கோவாவில் பாஜகவுக்கு எதிராகத் தான் மக்கள் வாக்களித்தனர். எனினும், தற்போது பாஜக ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி அலட்சியமாக செயல்பட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளேன் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai