சுடச்சுட

    

    பஞ்சாப் முதல்வரானார் அமரீந்தர் சிங்: சித்து உள்பட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு

    By DIN  |   Published on : 17th March 2017 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sing

    பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங்குக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் மாநில ஆளுநர் வி.பி. சிங் பட்னோர். நாள்: வியாழக்கிழமை.

    பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக அமரீந்தர் சிங் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் இரண்டு பெண்கள் உள்பட 9 பேர் இடம்பெற்றுள்ளனர்.
    பாஜகவிலிருந்து விலகி அண்மையில் காங்கிரஸில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கும் அமைச்சர் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
    மாநிலத் தலைநகர் சண்டீகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் வி.பி. சிங் பட்னோர், அமரீந்தர் சிங் உள்பட 10 பேருக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
    பஞ்சாப் முதல்வராக அமரீந்தர் சிங் பொறுப்பேற்பது இது இரண்டாவது முறையாகும். அண்மையில் நடைபெற்று முடிந்த பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களைக் கைப்பற்றியது. அகாலி தளம் - பாஜக கூட்டணி 18 இடங்களிலும், ஆம் ஆத்மி 20 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.
    ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் பெற்ற காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு பஞ்சாபில் ஆட்சியமைத்துள்ளது.
    அதிகபட்சமாக 18 அமைச்சர்கள் பஞ்சாப் மாநிலத்தில் பதவியேற்க முடியும் என்ற போதிலும், தற்போது 9 பேர் மட்டுமே அமரீந்தர் சிங்கின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
    விரைவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது. நவஜோத் சிங் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
    மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் உறவினர் மன்ப்ரீத் சிங் பாதல், பிரஹம் மொஹிந்திரா, சாது சிங் தரம்கோட், திரிப்த் ராஜீந்தர் சிங் பாஜ்வா, ராணா குர்ஜித் சிங் சோதி, சரண்ஜித் சிங் சன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.
    பெண் எம்எல்ஏக்களான அருணா செளதரி, ரஸியா சுல்தானா ஆகியோருக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
    பதவியேற்பு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, பூபேந்தர் சிங் ஹூடா, அஜய் மாக்கன், சச்சின் பைலட், பிரதாப் சிங் பாஜ்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    பிரதமர் வாழ்த்து: பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்ற அமரீந்தர் சிங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) வியாழக்கிழமை அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
    பஞ்சாபின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் அமரீந்தர் சிங்குக்கு பாராட்டுகள். அவரது தலைமையிலான அரசு, மாநிலத்தை புதிய வளர்ச்சிக்குக் கொண்டுச் செல்வதற்கு பாடுபட வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று அதில் மோடி தெரிவித்துள்ளார்.
    இந்திய ராணுவத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றியுள்ள அமரீந்தர் சிங், கேப்டனாகப் பொறுப்பு வகித்துள்ளார். கடந்த 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுடனான போரில் அவர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai