சுடச்சுட

  

  பணபலத்தால் ஆட்சி அமைத்தோமா? காங்கிரஸ் கூறுவது அபத்தம்

  By DIN  |   Published on : 17th March 2017 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  venkiah_naidu1

  கோவாவிலும், மணிப்பூரிலும் ஆட்சியமைப்பதற்கு பாஜக பணபலத்தைப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி கூறும் குற்றச்சாட்டு அபத்தமானது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
  கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜக வெற்றி பெறவில்லை.
  தனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுக்கவில்லை. அப்படி இருந்தும் அக்கட்சி இந்த மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
  இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
  உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் பிறகும் காங்கிரஸ் கட்சி பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அக்கட்சி தற்போது அபத்தமான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது.
  கோவாவிலும், மணிப்பூரிலும் காங்கிரஸால் ஆதரவைத் திரட்ட முடியவில்லை. இதனால், பாஜக ஆட்சியமைக்க ஆதரவு திரட்டியதும் மற்ற கட்சிகள் இது பற்றி கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளன. இது ஜனநாயகத்தில் ஏற்புக்குரியதல்ல. இவ்வாறு கேள்வி எழுப்புவது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
  கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் கூட ஏற்கவில்லை.
  இனியாவது காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியின் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார் வெங்கய்ய நாயுடு.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai