Enable Javscript for better performance
பெட்ரோல் நிலையங்களில் பரிவர்த்தனைக் கட்டணம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    பெட்ரோல் நிலையங்களில் பரிவர்த்தனைக் கட்டணம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி

    By DIN  |   Published on : 17th March 2017 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெட்ரோல் நிலையங்களில் வங்கி அட்டைகளின் வாயிலாக எரிபொருள் நிரப்பினால் பரிவர்த்தனைக் கட்டணங்கள் விதிக்கப்படுவது தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை கேள்வி எழுப்பின.
    சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச பண இருப்பு இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சில வங்கிகள் அண்மையில் அறிவித்த விவகாரத்தையும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்எழுப்பினர்.
    மாநிலங்களவையில் உடனடி கேள்வி நேரத்தின்போது, சமாஜவாதி கட்சி உறுப்பினர் நரேஷ் அகர்வால் பேசியதாவது:
    ’டிஜிட்டல் இந்தியா' என்ற பெயரில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சீன நிதி முதலீட்டின் கீழ் இயங்கும் ’பே-டிஎம்' நிறுவனத்தையும் அவ்வாறு மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு அந்நிறுவனத்தின் பொருளாதார மதிப்பு ஏறத்தாழ இரு மடங்கு அதிகரித்துள்ளது.
    பெட்ரோல் நிலையங்களில் கடன் அல்லது பற்று அட்டையைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்பினால், கூடுதலாக பரிவர்த்தனைக் கட்டணங்கள் விதிக்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது.
    ஆனால், அதற்கு நேர்மாறாக 2 சதவீதம் வரை பரிவர்த்தனைக் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. வங்கி சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டாலும், ஏடிஎம் சேவையை நான்கு முறைக்கு மேல் பயன்படுத்தினாலும் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என்றார் அவர்.
    இதைத்தொடர்ந்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரியும் இதே கருத்தை வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ’பே-டிஎம் நிறுவனத்தின் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுவதாகக் கூறுவது முற்றிலும் தவறான தகவல்' என்றார்.
    போஜ்புரிக்கு ஆதரவு: இதனிடையே, அரசியல் சாசனத்தின் 8-ஆவது அட்டவணையில் போஜ்புரி மொழியையும் சேர்க்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள எம்.பி. அன்வர் அன்சாரி மாநிலங்களவையில் வலியுறுத்தினார். சுமார் 25 கோடி மக்கள் பேசும் இனிமையான மொழி போஜ்புரி என்றும் அவர் தெரிவித்தார்.
    சுஷ்மாவுக்கு வரவேற்பு: உடல் நலக் குறைவு காரணமாக நீண்ட காலம் நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்காமல் இருந்து வந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவைக்கு வியாழக்கிழமை வந்தார். அவருக்கு வரவேற்பு தெரிவித்த எம்.பி.க்கள், நீண்ட ஆரோக்யத்துடனும், ஆயுளுடனும் சுஷ்மா இருக்க வேண்டும் என்று வாழ்த்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai