ரூ.2 கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 4 பேர் கைது
By DIN | Published on : 17th March 2017 01:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை போலீஸார் கைப்பற்றினர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து காவல் துறை துணை ஆணையர் வீரேந்திர மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காரில் செல்லாத ரூபாய் நோட்டுகள் எடுத்துச் செல்லப்பட இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், மும்பை நகர் முழுவதும் புதன்கிழமை இரவு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டோம்.
அப்போது, மும்பை புறநகர் பகுதியான பந்த்ராவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது, ஒரு காரில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டது கண்டறியப்பட்டது.
அந்தக் காரில் இருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட ரொக்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி. விசாரணையின்போது, அந்த ரொக்கத்தை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்காக கொண்டு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் வீரேந்திர மிஸ்ரா.
இதனிடையே, தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வைத்திருந்த 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் ரூ.44.48 லட்சம் ரொக்கம் இருந்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.