சுடச்சுட

  

  இந்திய மத குருக்கள் மாயமான விவகாரத்தில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை: பாகிஸ்தான்

  By DIN  |   Published on : 18th March 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியைச் சேர்ந்த இஸ்லாமிய மத குருக்கள் இருவர் பாகிஸ்தானில் மாயமான விவகாரத்தில், அவர்களைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
  தில்லியைச் சேர்ந்தவர் சையது ஆசிஃப் நிஸாமி. இவர் அங்குள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் ஒளலியா தர்காவில் தலைமை மத குருவாக உள்ளார். அவரும், அவரது உறவினரான நஸீம் நிஸாமியும் பாகிஸ்தானின் லாகூரில் அமைந்துள்ள டாட்டா தர்பார் வழிபாட்டுத் தலத்துக்குச் செல்லத் திட்டமிட்டனர்.
  இதற்காக கடந்த 8-ஆம் தேதி கராச்சி சென்ற அவர்கள், அங்குள்ள தங்களது உறவினர்களைச் சந்தித்துவிட்டு லாகூருக்குச் செல்ல முடிவு செய்தனர். இந்நிலையில், கராச்சி விமான நிலையத்துக்குச் சென்ற பிறகு அவர்கள் இருவரும் மாயமாகி விட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் என்னவானார்கள்? என்பது தொடர்பான எந்த விவரமும் தெரியவில்லை.
  இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) வெள்ளிக்கிழமை பதிவிட்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ’இஸ்லாமிய மத குருக்கள் இருவர் மாயமான விவகாரம் குறித்து பாகிஸ்தான் அரசுடன் விவாதிக்கப்பட்டுள்ளது; இதுதொடர்பாக விசாரிக்குமாறும், அதன் விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் அந்நாட்டிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
  இதனிடையே, லாகூரில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜகாரியா இதுதொடர்பாக கூறியதாவது:
  இஸ்லாமிய மத குருக்கள் மாயமான விவகாரம் தொடர்பாக இந்தியாவிடமிருந்து கோரிக்கைக் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இதுகுறித்து விசாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  மாயமானதாகக் கூறப்படும் இருவரைப் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai