சுடச்சுட

  

  உத்தரகண்ட் முதல்வராகிறார் திரிவேந்திர சிங்: இன்று பதவியேற்பு

  By DIN  |   Published on : 18th March 2017 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  TRIVENDRA

  உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக பாஜக மூத்த தலைவர் திரிவேந்திர சிங் ராவத் சனிக்கிழமை பதவியேற்கவுள்ளார்.
  பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
  70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 57 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 2 இடங்களிலும் வென்றன.
  இதையடுத்து, புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கு டேராடூனில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரிவேந்திர சிங் ராவத்தின் பெயரை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பிரகாஷ் பந்த், சத்பால் மகராஜ் ஆகியோர் முன்மொழிந்தனர். இதையடுத்து திரிவேந்திர சிங் ராவத் முதல்வர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  இதைத் தொடர்ந்து, ஆளுநர் கிருஷ்ண காந்த் பாலை திரிவேந்திர சிங் ராவத் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையேற்று திரிவேந்திர சிங் ராவத்தை ஆட்சியமைக்க ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
  அதன்படி, டேராடூனில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறும் விழாவில் திரிவேந்திர சிங் முதல்வராக பதவியேற்கிறார். அவருக்கு பதவிப்பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணத்தை ஆளுநர் செய்து வைக்கவுள்ளார். திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான அமைச்சரவையில் சில எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவியேற்கலாம் எனத் தெரிகிறது.
  உத்தரகண்ட் முதல்வராக பதவியேற்கவிருக்கும் திரிவேந்திர சிங் ராவத், தாக்குர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிர ஈடுபாடு கொண்டவர். 1983-ஆம் ஆண்டு முதல் 2002-ஆம் ஆண்டு வரையிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரசாரகராக இருந்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் பல்வேறு முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.
  பத்திரிகைப் படிப்பில் முதுகலை பயின்றுள்ள அவர், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். இதுவே உத்தரகண்ட் முதல்வர் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
  கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு தீவிரமாக பணியாற்றினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக இருந்து, அந்த மாநில பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai