சுடச்சுட

    

    உ.பி.யில் புதிய அரசு நாளை பதவியேற்பு: முதல்வர் யார்? என்ற மர்மம் நீடிப்பு

    By DIN  |   Published on : 18th March 2017 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான புதிய அரசு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) பதவியேற்கவுள்ளது. அதேநேரத்தில், முதல்வராக யார் பதவியேற்பார்? என்பது தொடர்பான மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. எனினும், பாஜக தரப்பில் யார் முதல்வராக பதவியேற்பது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
    இந்நிலையில், உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் லக்னௌவில் (மார்ச் 18) நடைபெறுகிறது. இதில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    இதுகுறித்து தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் மௌரியா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் யார் என்பதை கட்சியின் சட்டப் பேரவை எம்எல்ஏக்கள் குழு முடிவு செய்யும். புதிய அரசு வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) பதவியேற்கும். பதவியேற்பு விழாவில் கட்சியின் அனைத்து தேசியத் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்றார்.
    மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், ’சிகிச்சை முடிந்து வியாழக்கிழமை இல்லத்துக்கு திரும்பினேன்; தற்போது எனது உடல்நிலை நன்றாக உள்ளது' என்றார். புதிய முதல்வரை தேர்வு செய்யும் பொறுப்பை தம்மிடம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அளித்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் தனது பணியை திறம்பட செய்வேன் என்றார்.
    மனோஜ் சின்ஹா மறுப்பு: உத்தரப் பிரதேச முதல்வர் பதவிக்கு மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹாவின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தில்லியில் அவர் கூறுகையில், அந்த தகவலை மறுத்தார். அப்போது அவர் கூறுகையில், ’அப்பதவிக்கு நான் போட்டியிடவில்லை' என்றார்.
    ஆளுநர் தகவல்: இந்நிலையில், உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக் கூறியபோது, புதிய அரசு வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு பதவியேற்கும் என்று தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai