சுடச்சுட

  

  ஐஎஸ் அமைப்பிடம் இருந்து தாஜ்மகாலுக்கு அச்சுறுத்தல்? பாதுகாப்பு அதிகரிப்பு

  By DIN  |   Published on : 18th March 2017 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  TAJMAHAL

  உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் கட்டடத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடம் இருந்து அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து, அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
  இதுதொடர்பாக உத்தரப் பிரதேச மாநில சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் டிஜிபி தல்ஜித் சிங் சௌதுரி பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
  தாஜ்மகால் மீது தாக்குதல் நடத்த ஐஎஸ் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக இணையத்தில் தகவல் பரவுகிறது. இதுகுறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். அத்துடன் தாஜ்மகாலிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம் என்றார் தல்ஜித் சிங்.
  இணையதளத்தில் பகிரப்பட்ட தகவலில், கணினியால் வரையப்பட்ட தாஜ்மகால் கட்டடம் அருகே பயங்கரவாதி ஒருவர் ஆயுதத்துடன் நிற்பது போன்ற காட்சி உள்ளது. இதுதொடர்பாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
  உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐஎஸ் பயங்கரவாதி சைஃபுல்லா என்பவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்த சில தினங்களில், தாஜ்மகாலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கணினியால் வரையப்பட்ட படம் வெளியிடப்பட்டுள்ளது.
  தாஜ்மகாலை பொருத்தவரையிலும், உள்பகுதியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, மத்திய துணை ராணுவப் படை ஆகியவை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தாஜ்மகாலின் வெளிப்புற பகுதியில், உத்தரப் பிரதேச போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  கடந்த மாதம் தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தாஜ்மகால் வெளிப்புறச் சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைய முயன்றபோது பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்டார். கடந்த ஏப்ரல் மாதத்தில், தில்லியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சுவர் ஏறி குதித்து தாஜ்மகாலுக்கு உள்ளே செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai