Enable Javscript for better performance
கோவா ஆளுநரின் முடிவு குறித்து காங்கிரஸ் புகார்: மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம்- Dinamani

சுடச்சுட

    

    கோவா ஆளுநரின் முடிவு குறித்து காங்கிரஸ் புகார்: மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம்

    By DIN  |   Published on : 18th March 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவாவில் ஆட்சியமைக்க பாஜவுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன், அந்த மாநில ஆளுநர், மத்திய நிதி அமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுவது குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவையில் புகார் எழுப்பப்பட்டது. இதனால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
    மாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலை கூடியபோது, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் எழுந்து, கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா அதிகார துஷ்பிரயோகம் புரிந்தது குறித்து விவாதிக்க மேண்டும் என்றும், அதுவரை பிற அலுவல்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் கூறி விதி எண். 267-இன் கீழ் நோட்டீஸ் வழங்கினார்.
    அப்போது, அவர் கூறியதாவது:
    கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் பாஜக அங்கு ஆட்சியமைக்கும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் முடிவுகள் வெளியான 11-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் தாம் ஆலோசனை நடத்தியதாகவும், அதன்பிறகே பாஜவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் என்றார் திக்விஜய் சிங்.
    அப்போது, அவையின் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் குறுக்கிட்டு, திக்விஜய் சிங் அளித்த நோட்டீஸை ஏற்க முடியாது என்றும், கோவா ஆளுநரின் முடிவு குறித்து விவாதிக்க தகுந்த தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
    அப்போது, எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவருமான குலாம் நபி ஆசாத் எழுந்து, கோவாவில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக அந்த மாநில ஆளுநர், மத்திய அமைச்சரிடம் எவ்வாறு ஆலோசனை நடத்தலாம்? என்று கேள்வியெழுப்பினார்.
    அப்போது குறுக்கிட்ட மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தகுந்த தீர்மானம் கொண்டு வந்தால் இதுபற்றி விவாதிக்க அரசு தயார் என்றார்.
    எனினும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹா ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டார் என்று முழக்கமிட்டனர். இதையடுத்து, அவையை நண்பகல் வரை ஒத்திவைப்பதாக பி.ஜே.குரியன் அறிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai