Enable Javscript for better performance
கோவா விவகாரம்: காங்கிரஸ் தலைவர்கள் மீது திக்விஜய் சிங் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    கோவா விவகாரம்: காங்கிரஸ் தலைவர்கள் மீது திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 18th March 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    digvijayshing

    ’கோவா ஃபார்வர்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தடுத்துவிட்டனர். இதனால், காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது'' என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
    இதுதொடர்பாக, டுவிட்டர் வலைதளத்தில் வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது:
    கோவா சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன், மாநிலக் கட்சிகளான ஐக்கிய கோவா கட்சி, கோவா ஃபார்வர்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று யோசனை தெரிவித்திருந்தேன்.
    ஆனால், கோவா ஃபார்வர்ட் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு கட்சியின் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, அந்தக் கட்சி 4 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    கோவா ஃபார்வர்ட் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம்; ஆட்சியையும் பிடித்திருப்போம்.
    சட்டப் பேரவைக் குழுத் தலைவரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தாமதம் செய்ததாக புகார் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளர்கள் இன்னமும் தேர்வு செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    5 மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 11-ஆம் தேதி வெளியாகின. இதற்கு அடுத்த நாள் மணிப்பூர், கோவா மாநிலங்களில் கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    பஞ்சாபில், காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் 13-ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். கோவாவில் கட்சியின் சார்பில் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் தேர்வு செய்யப்பட்டது குறித்து ஆளுநருக்கு நாங்கள் கடிதம் அனுப்புவதற்கு முன்பாகவே, பாஜகவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுவிட்டது என்றார் திக்விஜய் சிங்.
    முழு பதவிக் காலத்தையும் பூர்த்தி செய்வோம் - பாரிக்கர்: இதனிடையே, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசுகையில், ’எனது அரசு 5 ஆண்டு பதவிக் காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai