சுடச்சுட

  

  நாரதா விவகாரம் குறித்து முதல்கட்ட விசாரணை: சிபிஐக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 18th March 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் லஞ்சம் வாங்குவது போன்று நாரதா நியூஸ் இணையதளத் தொலைக்காட்சியில் விடியோக்கள் வெளியான விவகாரம் குறித்து முதல்கட்ட விசாரணை மேற்கொள்ளும்படி சிபிஐக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, நாரதா நியூஸ் இணையதள தொலைக்காட்சியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கும்போது ரகசியமாக எடுக்கப்பட்ட சில விடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன. அதில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்களும், மாநில அமைச்சர்களுமான சோவன் சட்டர்ஜி, சுப்ரதா முகர்ஜி, சுவேந்து அதிகாரி; எம்.பி.க்கள் ககலி கோஷ் தஸ்திதார், சுல்தான் அகமது மற்றும் முன்னாள் அமைச்சர் மதன் மித்ரா உள்ளிட்டோர் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தொடரப்பட்டிருந்தன.
  இந்த மனுக்கள், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (பொறுப்பு) நிசிதா ஹாத்ரே, நீதிபதி டி. சக்ரவர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
  இந்த விவகாரம் குறித்து சிபிஐ முதல்கட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது. இந்த விடியோ விவகாரம் குறித்த அனைத்து ஆவணங்கள், சாதனங்கள் ஆகியவைற்றை 24 மணி நேரத்துக்குள் சிபிஐ தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், முதல்கட்ட விசாரணையை 72 மணி நேரத்துக்குள் சிபிஐ நிறைவு செய்ய வேண்டும்.
  முதல்கட்ட விசாரணை முடிந்தபிறகு, தேவை ஏற்படும்பட்சத்தில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, முறைப்படி விசாரணையை தொடங்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  மேலும், விடியோவில் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.எம்.ஹெச். மிர்சா என்பவரும் லஞ்சம் வாங்கும் காட்சி இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டி, அவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
  கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
  கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’நாரதா விவகாரம் குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் முன்கூட்டியே கணித்தது துரதிருஷ்டவசமானதாகும்' என்றார்.
  அமைச்சர்கள் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்: இந்நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. மேலும், சர்ச்சைக்குரிய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai