சுடச்சுட

  

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பிடியாணையை நிராகரித்தார் நீதிபதி கர்ணன்

  By DIN  |   Published on : 18th March 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Karnan1

  கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனிடம் பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையை மேற்கு வங்க காவல்துறை தலைவர் சூரஜித் கர் புரகயஸ்தா வெள்ளிக்கிழமை நேரில் வழங்கினார்.
  எனினும், அதை நிராகரிப்பதாக நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார்.
  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வரும் 31-ஆம் தேதி நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராக வேண்டியதை உறுதிப்படுத்துவதற்காக, அவருக்கு எதிராக பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையை உச்ச நீதிமன்றம் கடந்த 10-ஆம் தேதி பிறப்பித்தது.
  நீதித் துறை வரலாற்றில், பணியில் இருக்கும் நீதிபதியின் மீது இத்தகைய பிடியாணை பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், கொல்கத்தா நியூ டவுன் பகுதியிலுள்ள நீதிபதி கர்ணனின் இல்லத்துக்கு மேற்கு வங்க காவல்துறை தலைவர் சூரஜித் கர் புரகயஸ்தா, கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமார், காவல்துறை டிஐஜி ராஜேஷ் குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை சென்றனர்.
  பின்னர் அவர்கள், நீதிபதி கர்ணனிடம் பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையை வழங்கினர். இதையொட்டி, நீதிபதியின் இல்லத்துக்கு முன்பு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த வாரம் நீதிபதி கர்ணன் கூறுகையில், ’பணியில் இருக்கும் நீதிபதியின் மீது பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையைப் பிறப்பிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. மேலும், நான் தலித் என்பதாலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என குற்றம்சாட்டியிருந்தார்.
  மேலும், இத்தகைய பிடியாணையைப் பிறப்பிப்பதற்காக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் 6 நீதிபதிகள் மீது ’தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989'-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு நீதிபதி கர்ணன் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
  நிராகரிப்பு: இதனிடையே, காவல்துறை அதிகாரிகள் அளித்த பிடியாணையை நிராகரிப்பதாக நீதிபதி கர்ணன் தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வுக்கு நீதிபதி கர்ணன் வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், பிணையில் வெளிவரக் கூடிய பிடியாணையை காவல்துறை அதிகாரிகள் தம்மிடம் அளித்ததாகவும், எனினும், தகுந்த காரணங்களின் அடிப்படையில் அதை தாம் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai