Enable Javscript for better performance
மத்திய அமைச்சர் பதவி? : ஃபட்னவீஸ் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    
    devendrafadnavis

    மத்திய அமைச்சராக தாம் நியமிக்கப்படலாம் என்ற ஊகத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் திட்டவட்டமாக மறுத்தார்.
    ’இந்தியா டுடே 2017-ஆம் ஆண்டு மாநாடு', மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸிடம், ’நீங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது.
    அதற்கு, ’முதல்முறையாக உங்கள் நிறுவனம் தில்லியில் மாநாட்டை நடத்தாமல் மும்பையில் நடத்தியுள்ளது. எனவே, தில்லிக்கு செல்ல வேண்டிய தேவை எனக்கு ஏற்படவில்லை. நான் இங்கு தான் இருப்பேன்' என்று பதிலளித்தார் ஃபட்னவீஸ். இதன்மூலம் தாம் மத்திய அமைச்சராகப் போவதில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
    மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனை, மாநில அரசுக்கு எதிராக தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான ’சாம்னா'வில் தொடர்ந்து தலையங்கம் எழுதி வருவது குறித்து ஃபட்னவீஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
    அதற்கு, ’சிவசேனை எதிர்க்கட்சியைப் போன்று செயல்பட்டு வருகிறது. பாஜக மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்த காலத்தில் 22 கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டார். எனது அணியில் ஒரு கட்சிதானே (சிவசேனை) இருக்கிறது. என்னால் அக்கட்சியை சமாளித்துவிட முடியும்' என்றார் அவர்.
    முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்துவந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வரானதால், அந்தப் பதவிக்கு ஃபட்னவீஸ் நியமிக்கப்படலாம் என்று ஊகம் வெளியானது.
    இந்த ஊகத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோது நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai