சுடச்சுட

  

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது: முன்னாள் தேர்தல் ஆணையர்கள் கருத்து

  By DIN  |   Published on : 18th March 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  commisinor

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து, தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அக்கட்சிக்கு மட்டும் வாக்குகள் பதிவாகும்படி மோசடி செய்யப்பட்டிருப்பதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை சமாஜவாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவும் ஆதரித்தார்.
  இதேபோல், பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு வாக்குகள் பதிவாகும்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் புகார் தெரிவித்து வருகிறார்.
  இந்நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் எம்.எஸ். கில், வி.எஸ். சம்பத், ஹெச்.எஸ். பிரம்மா ஆகியோர் தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் பேசியபோது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என்றும், அதில் யாரும் மோசடி செய்துவிட முடியாது என்றும் குறிப்பிட்டனர்.
  இதுகுறித்து எம்.எஸ். கில் கூறியதாவது:
  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மக்கள் நம்புகின்றனர். ஆனால், துரதிருஷ்சவசமாக, சில அரசியல் கட்சிகள் அந்த நம்பிக்கையை உடைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளன. தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள், தோல்வியால் ஏற்பட்ட அதிருப்தியை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது திருப்பி விடக்கூடாது என்றார் எம்.எஸ். கில்.
  மற்றொரு முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் கூறியதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிர்ப்பு எழுவது புதிதல்ல. அந்த இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்பது அரசியல்வாதிகளின் மனதுக்கு தெரியும். ஆனால், தேர்தலில் தோல்வியடையும் கட்சிகள், இதுபோன்ற மோசடி குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்பு அந்த இயந்திரத்தை வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் சோதித்துப் பார்க்கின்றனர். தேர்தலுக்குப் பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அவர்கள்தான் சீலிடுகின்றனர். பிறகு, பாதுகாப்பு போடப்பட்டுள்ள அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும். இந்நிலையில், அவற்றில் யாரும் திருத்தம் செய்ய முடியாது என்றார் வி.எஸ். சம்பத்.
  முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஹெச்.எஸ். பிரம்மா கூறுகையில், ’மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் நம்பகமானவை; அதன் நம்பகத்தன்மை குறித்து யாராலும் கேள்வி எழுப்ப முடியாது' என்றார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai