Enable Javscript for better performance
மோடியின் அணுகுமுறையும், கடின உழைப்பும் என்னை கவர்ந்தது: பிரணாப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

  

  மோடியின் அணுகுமுறையும், கடின உழைப்பும் என்னை கவர்ந்தது: பிரணாப் பாராட்டு

  By DIN  |   Published on : 18th March 2017 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranap

  மும்பை பல்கலைக்கழகத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு வெள்ளிக்கிழமை ''கெளரவ டாக்டர்'' பட்டம் வழங்கி கெளரவிக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

  பிரணாபின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை பத்திரிகை நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி தனது பதவிக்காலத்தில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இப்போதைய பிரதமர் மோடி குறித்துப் பேசியதாவது:
  பிரதமர் மோடியின் அணுகுமுறை அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது; அவரது ஆற்றலும், கடினமான உழைக்கும் திறமையும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.
  உத்தரப் பிரதேசத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய மோடி, கட்சியினர் அனைவரும் பணிவுடன் பணியாற்ற வேண்டுமென்று வலியுறுத்தினார். அவரது இந்த பேச்சு எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.
  பிரச்னைகளைக் கையாளுவதிலும் மோடி தனக்கென தனி பாணியைக் கடைபிடித்து வருகிறார். இதற்கு முன்பு பிரதமராக இருந்தவர்களில் பலரும் நாடாளுமன்றத்தில் மிகுந்த அனுபவமிக்கவர்களாக இருந்தனர். ஆனால், குஜராத்தில் இருந்து நேரடியாக மத்திய அரசுக்கு வந்த மோடி, சிக்கலான வெளியுறவு விவகாரம், பொருளாதார விஷயங்களில் ஆகியவற்றை மிகவிரைவாகக் கற்றுக் கொண்டு, அதில் நிபுணத்துவம் பெற்றவராகிவிட்டார். இதற்காக அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  பொருளாதாரத்துறையில் சிறந்த அறிஞரான மன்மோகன் சிங்கிடம் இருந்து நான் அதிக விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். எனது சிறந்த நண்பராகவும், அமைச்சரவை சகாவாகவும் நீண்டநாள்கள் மன்மோகன் சிங் இருந்தார் என்றார் பிரணார் முகர்ஜி.
  குறுகிய மனப்பான்மை வேண்டாம்: மும்பை பல்கலைக்கழகத்தில் வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்டு சுவாமிநாதனை கெüரவித்த பிறகு, பிரணாப் முகர்ஜி பேசியதாவது: தேசிய வளர்ச்சிக்கான முயற்சிகளில் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனவே, குறுகிய மனப்பான்மை, சிந்தனைகள் ஆகியவற்றை கைவிட்டு, விசாலமான உரையாடல்கள், விவாதங்களை நாம் பின்பற்ற வேண்டும்.
  சகிப்பின்மைக்கு இடமில்லை: பல்வேறு கருத்துகள், சிந்தனைகள், தத்துவங்கள் ஆகியவை உடனிருக்கும் இடமாக பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும். நமது கல்வி நிலையங்களில் சகிப்பின்மை, பாரபட்சம், வெறுப்புணர்வு ஆகியவற்றுக்கு இடமில்லை.
  சிறந்த கல்வி முறை என்பது, மாணவர்களை சமூகப் பொறுப்பு மிக்கவர்களாக மாற்றுவதற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். எனவே, மாணவர்களை சமூகப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார் பிரணாப் முகர்ஜி.
  பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறவுள்ளேன்
  குடியரசுத் தலைவர் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறப் போவதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இதுதொடர்பாக நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
  தனித்தனியே சிறப்பம்சங்களை வரையறுத்துக் கூறுமளவுக்கு அரசுப் பதவிகள் பெரிய விஷயங்கள் அல்ல. மக்களுக்குச் சேவையாற்றும் இன்றியமையாத பொறுப்பு என்பது மட்டுமே அதன் சாராம்சமாகும். குடியரசுத் தலைவர் பொறுப்பை நான் வகித்து வருவதும் அந்த அடிப்படையில்தான். மாறாக எனது அறிவாற்றல் மேம்படக் கூடும் என்பதற்காகவோ, எனக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பதற்காகவோ நான் அந்தப் பதவியை வகிக்கவில்லை.
  தேசத்தின் உயரிய பொறுப்பான குடியரசுத் தலைவர் பதவியை வகித்து வரும் நான், வருங்காலத்தில் எனது அடிச்சுவடாக எதையும் விட்டுச் செல்லப் போவதில்லை. ஏனென்றால் நான் சாமானிய மக்களில் ஒருவன். வெகுஜன வாழ்வுடன் இரண்டறக் கலக்கப் போகிறவன். ஆம், இந்தப் பதவிக் காலத்துக்குப் பிறகு பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளேன் என்றார் பிரணாப் முகர்ஜி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai