சுடச்சுட

    

    விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு உறுதி: திருச்சி சிவா தனி நபர் தீர்மானத்துக்கு எம்.பி.க்கள் ஆதரவு

    By DIN  |   Published on : 18th March 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நிரந்தரமாக நீக்கும் வகையில், விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்ட மசோதாவில் திருத்தம் கொண்டு வர மாநிலங்களவையில் மத்திய அரசு உறுதியளித்தது.
    இது தொடர்பாக மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில், 1960-இல் விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து காட்சிப்படுத்த தடை செய்யப்பட்டுள்ள விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தும் தனி நபர் தீர்மானத்தை திருச்சி சிவா முன்மொழிந்தார்.
    உறுப்பினர்கள் ஆதரவு: இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு முறைப்படி சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றியதை விளக்கி அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் திருச்சி சிவாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
    நிரந்தரத் தீர்வு: இதையடுத்து, விவாதத்தின் முடிவில் திருச்சி சிவா பேசியதாவது: காட்சிப்படுத்த தடை செய்யப்பட்டுள்ள விலங்குகள் பட்டியலில் வன விலங்குகள் மட்டுமே முன்பு இருந்தன. ஆனால், வீட்டு வளர்ப்புப் பிராணியான காளையை, மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த அரசு திடீரென சேர்த்தது.
    தமிழகத்தில் நடைபெற்ற வரலாறு காணாத போராட்டத்தின் விளைவால் காளையை ஜல்லிக்கட்டில் பங்கேற்க வகை செய்யும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது. விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து அதை அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் இந்த விவகாரத்தில் இனி நீதிமன்றம் தலையிடுவதை நிரந்தரமாகத் தடுக்க முடியும் என்றார் திருச்சி சிவா.
    அமைச்சர் பதில்: இதையடுத்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பேசுகையில், ’விலங்குகள் கொடுமைப்படுத்துதல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் நடைமுறைகளை மத்திய அரசே விரைவில் மேற்கொள்ளும். எனவே, தீர்மானத்தை திருச்சி சிவா திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, தனது தீர்மானத்தை திரும்பப் பெறுவதாக திருச்சி சிவா தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai