Enable Javscript for better performance
வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் வேண்டும்: மக்களவையில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் வேண்டும்: மக்களவையில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 18th March 2017 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anbumani

    வேளாண் துறைக்கென தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று மக்களவையில் தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
    இது தொடர்பாக மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: மொத்த பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 2.4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
    இந்தியாவில் மூன்றில் இரு பங்கு மக்கள் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இதனால், அடுத்த ஆண்டில் இருந்து விவசாயத்திற்காக தனியாக பட்ஜெட்டை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.
    விவசாயிகளுக்கு கரும்புக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை டன்னுக்கு ரூ.3,576 என நிர்ணயிக்க வேண்டும். அதேபோன்று, அரிசிக்கு ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2,440 என நிர்ணயிக்க வேண்டும். இப்படித் தரும் போது விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டியதில்லை. அவர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டியதில்லை.
    தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விஷயத்தில் நாம் சுயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார் அன்புமணி ராமதாஸ்.
    ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு: விவசாயிகள் தற்கொலை சம்பவங்களைத் தடுக்கக் கோரியும் தேசிய, தென்னிந்திய நதிகளை இணைக்கக் கோரியும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லி ஜந்தர் மந்தரில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற விவசாயிகளை டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai