சுடச்சுட

  

  அனைத்து பிரிவினரின் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்: யோகி ஆதித்யநாத் உறுதி

  By DIN  |   Published on : 19th March 2017 11:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yogiadityanath

  உத்தரப் பிரதேசத்தில் பாகுபாடின்றி அனைத்து பிரிவினரின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவேன் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்தார்.
  லக்னெளவில், மாநில முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு முதன்முதலாகப் பேட்டியளித்த அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
  கடந்த 15 ஆண்டுகளில், முந்தைய அரசுகள் ஊழல்களில் ஈடுபட்டதாலும், தங்களுக்கு நெருக்கமானவர்களுக்குச் சலுகைகள் காட்டியதாலும், இந்த மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கிவிட்டது. சட்டம்-ஒழுங்கை காக்கத் தவறியதால் மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.
  இந்நிலையில், அனைத்து பிரிவினருக்குமான வளர்ச்சி என்ற நோக்கத்துடன் மாநில அரசு பாடுபடும். மாநிலத்தில் சமச்சீரான வளர்ச்சியை நாங்கள் உறுதிசெய்வோம்.
  மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.
  சொத்து விவரங்களைத் தெரிவிக்க அமைச்சர்களுக்கு உத்தரவு: அதைத் தொடர்ந்து, மாநில அமைச்சர்கள் அனைவரும் தங்களது வருமானம், சொத்து விவரங்களை 15 நாள்களில் தெரிவிக்க வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
  ஊழலை ஒழிப்பதற்கான முதல் நடவடிக்கையாக, முதல்வராகப் பதவியேற்ற பிறகு அமைச்சர்களுடனான முதல் அறிமுகக் கூட்டத்திலேயே யோகி ஆதித்யநாத் இந்த உத்தரவைப் பிறபித்தார். இதுதொடர்பாக, அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா கூறியதாவது:
  ஊழலை வேரறுப்பதே பாஜகவின் முக்கிய நோக்கமாகும். எனவே, அமைச்சர்கள் அனைவரும் தங்களது வருமானம், அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் ஆகியவற்றை 15 நாள்களில் கட்சித் தலைமையிடமும், முதல்வருக்கான செயலரிடமும் அளிக்க வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
  அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
  இதுதவிர, பிறரது உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார் என்று ஸ்ரீகாந்த் சர்மா கூறினார்.
  விழாக்கோலம் பூண்ட கிராமம்: இதனிடையே, யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பொறுப்பேற்றதை அடுத்து, அவரது சொந்த ஊரான உத்தரகண்ட் மாநிலம், பவூரி மாவட்டத்தில் உள்ள பஞ்சூர் கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
  யோகி ஆதித்யநாத்தின் பெற்றோரான ஆனந்த் சிங் விஷ்ட்-சாவித்ரி தம்பதிக்கு உறவினர்களும், நண்பர்களும் வீட்டுக்கு வந்தும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai