சுடச்சுட

  
  uttrakhand

  டேராடூனில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் உத்தரகண்ட் முதல்வராக பதவியேற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து ஆதரவாளர்களை நோக்கி கையசைக்கும் திரிவேந்திர சிங் ராவத்.

  உத்தரகண்ட் முதல்வராக பாஜக மூத்த தலைவர் திரிவேந்திர சிங் ராவத் சனிக்கிழமை பதவியேற்றார். அவருடன் 9 பேர், மாநில அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
  டேராடூனில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், திரிவேந்திர சிங் ராவத்துக்கு பதவிப்பிரமாணம், ரகசிய காப்புப் பிரமாணத்தை ஆளுநர் கே.கே. பால் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, சத்பால் மகராஜ், ஹரக் சிங் ராவத், மதன் கௌசிக், அரவிந்த் பாண்டே, சுபோத் உனியால், யஷ்பால் ஆர்யா, பிரகாஷ் பந்த், ரேகா ஆர்யா, தன் சிங் ராவத் ஆகிய 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கும் ஆளுநர் கே.கே. பால் பதவிப்பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணத்தை செய்து வைத்தார்.
  பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 57 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, டேராடூனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டப் பேரவை பாஜக எம்எல்ஏக்கள் குழுத் தலைவராக திரிவேந்திர சிங் ராவத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைதொடர்ந்து, ஆளுநர் கே.கே. பாலை வெள்ளிக்கிழமை மாலை சந்தித்த திரிவேந்திர சிங் ராவத் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையேற்று திரிவேந்திர சிங் ராவத்தை மாநிலத்தில் ஆட்சியமைக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
  ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிர ஈடுபாடுடைய திரிவேந்திர சிங், அந்த அமைப்பின் பிரசாரகராகப் பணியாற்றியதுடன், பல்வேறு பதவிகளையும் வகித்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
  பாஜகவின் தேசிய செயலாளராக கடந்த 2013-ஆம் ஆண்டில் திரிவேந்திர சிங் நியமிக்கப்பட்டார். அதையடுத்து, உத்தரப் பிரதேச மாநில பாஜக விவகாரங்களை கவனிக்கும் பொறுப்புக்கு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு, அந்த மாநிலத்துக்கான கட்சியின் மேலிடப் பொறுப்பாளராக இருந்தார்.
  நடந்து முடிந்த தேர்தலில், தொய்வாலா தொகுதியில் போட்டியிட்ட திரிவேந்திர சிங் ராவத், காங்கிரஸ் வேட்பாளரைக் காட்டிலும் 24,869 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

  பிரதமர் மோடி வாழ்த்து

  உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள திரிவேந்திர சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
  திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, சுட்டுரையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உத்தரகண்ட் முதல்வராக பதவியேற்ற திரிவேந்திர சிங், அவரது அமைச்சர்கள் குழுவுக்கு எனது வாழ்த்துகள். அவர்கள் கடினமாக பணியாற்றுவார்கள் என்றும், மக்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள் என்றும் நம்புகிறேன்.
  மக்கள் செலுத்திய அன்புக்கு பிரதிபலனாக, மாநிலத்தின் வளர்ச்சியை உச்சத்துக்கு புதிய அரசு கொண்டு செல்ல வேண்டும் என்று அந்தப் பதிவுகளில் மோடி தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai