Enable Javscript for better performance
உ. பி. முதல்வராகிறார் யோகி ஆதித்யநாத்- Dinamani

சுடச்சுட

  
  yogi

  உத்தரப் பிரதேசத்தின் புதிய முதல்வராக மக்களவை உறுப்பினர் யோகி ஆதித்யநாத்தை பாஜக தலைமை அறிவித்துள்ளது. மாநிலத்தின் துணை முதல்வர்களாக எம்.பி. கேசவ பிரசாத் மெளரியா, லக்னெள மேயர் தினேஷ் சர்மா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியிருந்தாலும், முதல்வர் அரியணையில் அமரப் போவது யார்? என்ற கேள்வி பரவலாக எழுந்து வந்தது. இந்நிலையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் யோகி ஆதித்யநாத்துக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  பாஜக இமாலய வெற்றி: அண்மையில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் 325 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பாஜக கூட்டணி பதிவு செய்தது. சமாஜவாதி - காங்கிரஸ் கூட்டணி வெறும் 54 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய அளவில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.
  அதேவேளையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் பாஜக கொடி பறக்கத் தொடங்கியது அக்கட்சிக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. இந்த மிகப் பெரிய வெற்றியின் வாயிலாக மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் அதிகரிக்க வழி உருவானது. மேலும், விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலிலும் பாஜக சார்பில் முன்னிறுத்தப்படும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
  முதல்வர் யார்?: இந்தச் சூழலில், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பாஜக தலைமை யாரைத் தேர்வு செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. இதுதொடர்பாக ஒரு வாரத்துக்கும் மேலாக கட்சியின் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வந்தனர். முதல்வர் பொறுப்புக்கு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங், பாஜக மூத்த தலைவர் ராம் பிரகாஷ் குப்தா, புல்பூர் தொகுதி எம்.பி.யும், உத்தரப் பிரதேச பாஜக தலைவருமான கேசவ் பிரசாத் மெளரியா ஆகியோரின் பெயர்கள் அதில் இடம்பெற்றிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், உத்தரப் பிரதேச பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்றது.
  அப்போது ஆதித்யநாத்தின் பெயரை எம்எல்ஏ சுரேஷ் கன்னா முன்மொழிந்தார். அவருக்கு மாற்றாக வேறு எவரையாவது முன்மொழிய விருப்பமா? எனக் கூட்டத்தில் கேட்கப்பட்டது. ஆனால், பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் யோகி ஆதித்யநாத்தை ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். பிறகு யோகி ஆதித்யநாத்தை மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜக தலைமை முறைப்படி அறிவித்தது.
  இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் ஆகியோர் லக்னெளவில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
  உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு கிடைத்திருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி. கட்சியின் காலச்சுவட்டில் இது ஒரு மைல்கல். பொதுவாகவே பாஜக என்பது சாமானிய மக்களுக்கான கட்சியாகும். நாட்டு மக்கள் பிரதமர் மோடியுடன் பயணிக்க விரும்புகின்றனர் என்பதையே உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
  தற்போது மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத்தை பாஜக சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். துணை முதல்வர்களாக இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
  இதைத்தொடர்ந்து பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் யோகி ஆதித்யநாத்துக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் வகையிலான நல்லாட்சியை நாங்கள் வழங்குவோம்' என்றார்.
  இன்று பதவியேற்பு: ஆதித்யநாத் தலைமையிலான புதிய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்க உள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கற்க உள்ளதாகத் தெரிகிறது.

  சர்ச்சைகளுக்குச் சொந்தக்காரர்

  உத்தரப் பிரதேசத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள யோகி ஆதித்யநாத் பல்வேறு சர்ச்சைகளுக்குச் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு தருணங்களில் அவர் தெரிவித்த கருத்துகள் கடும் விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளன.
  உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதியில் இருந்து 5 முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யோகி ஆதித்யநாத். பிரசித்தி பெற்ற கோரக்நாத் மடத்தின் தலைவராகவும் அவர் பொறுப்பு வகித்து வருகிறார்.
  ஹிந்தி நடிகர் ஷாரூக் கானை பாகிஸ்தான் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதுடன் ஒப்பிட்டு ஆதித்யநாத் பேசியது விமர்சனங்களை எழுப்பியது. அதேபோன்று அன்னை தெரசா மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்று அவர் தெரிவித்த கருத்தும் சர்ச்சைகளுக்குள்ளானது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai