சுடச்சுட

    

    ஒரு லட்சம் மதரஸாக்களில் கழிப்பறைகள் கட்ட மத்திய அரசு திட்டம்

    By DIN  |   Published on : 19th March 2017 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டிலுள்ள ஒரு லட்சம் மதரஸாக்களில் (இஸ்லாமிய மதக் கல்வி நிலையங்கள்) கழிப்பறைகளைக் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    இதுதொடர்பாக, மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
    மௌலானா ஆஸாத் கல்வி அறக்கட்டளையின் ஆட்சி மன்றக் குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இஸ்லாமிய மதக் கல்வி நிலையங்களை பெரிய அளவில் சீரமைக்க திட்டமிட்டுள்ளோம். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த நிதியாண்டின் இறுதிக்குள் ஒரு லட்சம் இஸ்லாமிய மதக் கல்வி நிலையங்களில் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்படும். மேலும், இந்தக் கல்வி நிலையங்களில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
    கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கில், இக்கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படும். சில குறிப்பிட்ட இஸ்லாமிய மதக் கல்வி நிலையங்களில் அறிவியல் தொழில்நுட்ப வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும். மௌலானா ஆஸாத் கல்வி அறக்கட்டளை செயல்படுத்தி வரும் பேகம் ஹசரத் மஹால் தேசிய உதவித்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை 20,000 மாணவிகள் பயனடைந்துள்ளனர். வரும் 31-ஆம் தேதிக்குள் மேலும் 25,000 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அடுத்த நிதியாண்டில், சுமார் 5 லட்சம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
    சிறுபான்மையினத்தவர்கள் வளர்ச்சி காண்பர்: உத்தரப் பிரதேசத்தில் முடங்கிக் கிடக்கும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் புதுப்பிக்கப்படும். மாநிலத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுபான்மையினத்தவர்கள், பாஜக ஆட்சியின் கீழ் வளர்ச்சியைக் காண்பார்கள் என்றார் முக்தார் அப்பாஸ் நக்வி.
    மௌலானா ஆஸாத் கல்வி அறக்கட்டளையானது, மத்திய சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி தொண்டு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai