சுடச்சுட

    

    குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு சட்ட தன்னார்வலர்கள் உதவ வேண்டும்

    By DIN  |   Published on : 19th March 2017 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    JSKhehar

    குற்றச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு சட்ட தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் வேண்டுகோள் விடுத்தார்.
    மாநில சட்ட சேவை அமைப்புகளின் 15-ஆவது அகில இந்திய மாநாட்டை தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது: பயங்கரவாத சம்பவம் தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தபோதிலும், அதை எதிர்த்து பயங்கரவாதி சீராய்வு மனு தாக்கல் செய்ததை இதற்கு முன்பு நாம் பார்த்திருப்போம். அதேநேரத்தில், குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர், அவர்களது குடும்பத்தினர் ஆகியோரது நிலை குறித்து பல ஆண்டுகளாகவே யோசித்து வருகிறேன்.
    அமிலவீச்சில் முக அழகை இழந்து, சமூகத்தை எதிர்கொள்ள முடியாத பெண் என்ன செய்வார்? பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்கள், அவர்களின் வாழ்க்கை என்ன ஆகும்? என்றும் யோசித்துள்ளேன். அவர்களுக்கு நாம் ஏன் உதவி செய்யக் கூடாது என்பது குறித்தும் சிந்தித்தேன்.
    இத்தகைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களை நாம் நேரில் சென்று சந்திக்க வேண்டும். 2017-ஆம் ஆண்டை குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்யும் ஆண்டாக மாற்ற வேண்டும். தேசிய சட்ட சேவை ஆணையம், மாநில சட்ட சேவைகள் ஆணையம், மாவட்ட சட்ட சேவை ஆணையங்கள் ஆகியவை தங்களிடம் இருக்கும் சட்ட தன்னார்வலர்களை ஒவ்வொரு விசாரணை நீதிமன்றத்துக்கும் அனுப்பி, பாதிக்கப்பட்டோரை சந்திக்கச் செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டதும் வழக்கு முடிந்து விடாது என்பதையும், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக இழப்பீடு பெறும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்பதையும் எடுத்துரைக்கச் செய்ய வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 357-ஏ பிரிவில், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு பெறும் உரிமை உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறித்து விளக்க வேண்டும்.
    குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 357-ஆவது பிரிவில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அபராதம், பாதிக்கப்பட்டோரை சென்றடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல், 357-ஏ பிரிவில், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிக்க தேசிய அளவிலும், மாநில அளவிலும் நிதித் தொகுப்பை உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதித் தொகுப்பில் இருந்து பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு அளிக்கலாம்.
    இதேபோல், குற்ற வழக்கில் கைது செய்யப்படும் நபருக்கும் அவரது கருத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். எனவே, அவரது வழக்கிலும் சட்ட தன்னார்வலர்கள் உதவ வேண்டும் என்றார் ஜே.எஸ். கேஹர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai